சென்னை: ஏ.சி. உணவகங்கள் மீது மத்திய அரசு விதித்த சேவை வரியை எதிர்த்து நாடு முழுவதும் ஹோட்டல்கள் நாளை (ஏப்ரல் 29) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
ஏசி உணவகங்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் கூடுதல் சேவை வரியை விதித்தது.
இதை ரத்து செய்ய வேண்டும், உணவுத் தரம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அகிய இந்திய ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் தலைவர் சீனிவாசராஜா, செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் ராமசாமி ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில்,
குளிர்சாதன வசதி கொண்ட உணவகங்கள் 12.36 சதவீத சேவை வரியை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் சேவை வரி நடைமுறைக்கு வந்துள்ளது. உணவகங்கள் சார்பில் ஏற்கனவே மாநில அரசுக்கு வாட் வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் மத்திய அரசு ஏசி வசதி ஹோட்டல்களுக்கு சேவை வரி விதித்துள்ளது கண்டனத்துக்குரியது. இதனை ரத்து செய்ய வேண்டும்.
மதுபான வசதி கொண்ட ஏசி உணவகங்களுக்கு மட்டுமே விதித்து வந்த இந்த சேவை வரி தற்போது உணவகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சுமார் 5,000 ஹோட்டல்களில் 1,000 ஹோட்டல்கள் ஏசி வசதி உடையவை.
சேவை வரி விதித்துள்ளதால், சென்னையில் உள்ள சுமார் 1,000 ஏசி ஹோட்டல்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஹோட்டல்களில் மட்டும் சுமார் 2.5 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சேவை வரியின் காரணமாக வர்த்தகத்தில் நிலவி வரும் சரிவு தொடர்ந்தால் சுமார் 20 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்படும்.
ஏற்கனவே உணவு பண்டங்களின் விலை உயர்ந்து, நடுத்தர மக்களின் வர்த்தகத்தை நாங்கள் இழந்து வரும் நிலையில் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதால் அதை மேலும் இழக்க நேரிடும்.
இதனால், மத்திய அரசு விதித்துள்ள சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் ஏசி ஹோட்டல்கள் மட்டுமின்றி ஏசி வசதி இல்லாத ஹோட்டல்களும் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. அதன்படி சென்னையிலும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்றனர்.