சேலம், ஏப். 14-
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் சாமுவேல் (வயது 37). இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி (வயது 27) என்ற மனைவியும், வெங்கடேஷ் (வயது 6), நவீன் (வயது 2) என்ற குழந்தைகளும் உள்ளனர்.
இவர் ஊர் ஊருக்கு சென்று கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சாமுவேல் தனது மனைவி, குழந்தைகளுடன் சேலம் வந்தார்.
பின்னர் இவர் பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள வணிக வளாகம் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பம் ஆனார். இன்று காலை லட்சுமியை பிரசவத்திற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
அப்போது நர்சுகள் சிலரும் மற்றும் சில ஊழியர்கள் சிலரும் வந்து பணம் இருக்கிறதா? என கேட்டனர். அதற்கு பணம் இல்லை என கூறினர். இதனால் அவர்கள் பணம் எடுத்து கொண்டு வாருங்கள் என கூறி லட்சுமியையும், அவரது கணவரையும் அனுப்பி வைத்து விட்டனராம். இதனால் கணவன், மனைவி வணிக வளாகத்திற்கு நடந்து சென்றனர்.
அப்போது லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் லட்சுமி வணிக வளாகப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் அப்படியே அமர்ந்து சத்தம் போட்டு கத்தினார். இதை அறிந்த அந்த பகுதியில் இருக்கும் பண்ணாரி என்ற பெண்ணும் மேலும் சில பெண்களும் லட்சுமி இருக்கும் இடத்திற்கு வந்து அவரை சுற்றிலும் புடவை மற்றும் துணிகளை கட்டினர். பின்னர் அவருக்கு பிரசவம் பார்த்தனர்.
சிறிது நேரத்தில் லட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை லட்சுமியும், இவரது கணவர் சாமுவேலும் எடுத்து கொஞ்சினர். வணிகவளாகம் பகுதியில் உள்ள மரத்தடியில் பெண் ணுக்கு பிரசவம் ஏற்பட்டதை அறிந்த திரளானோர் அங்கு வந்து சாமுவேலுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவம் குறித்து லட்சுமி கூறியதாவது:-
சேலம் அரசு ஆஸ்பத் திரிக்கு சென்று பிரசவத்திற்கு சேர்க்க கூறினோம். ஆனால் எங்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டனர். நாங்கள் இல்லை என்றோம். இதனால் எங் களை ஆஸ்பத்திரியில் சேர்க்காமல் திருப்பி அனுப்பி விட்டனர். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.