மத்திய பிரதேசத்தில் தேர்வு அறையில் நல்ல பாம்பு கடித்து 6ம் வகுப்பு மாணவன் பலி

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கையில் பாம்பு கடித்து 12 வயது மாணவர் பலியானார். 

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டம் மானோகாவ்ன் கலான் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு நடந்து வருகிறது. நேற்று தேர்வு நடந்தபோது ஆறாம் வகுப்பு மாணவர் லோகேஷ்(12) என்பவரை தேர்வு அறைக்குள் நுழைந்த பாம்பு கடித்தது. இதில் லோகேஷ் விஷம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து தகவல் அறிந்த கிராமத்தினர் போராட்டத்தில் குதித்தனர். இது குறித்து கேள்விப்பட்ட பர்கத் தொகுதி எம்.எல்.ஏ. கமல் மார்ஸ்கோலே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமத்தினரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

இந்த சம்பவம் பற்றி கல்வி அதிகாரி துனேன்திரா பிசன் கூறுகையில்

4 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுத்துள்ளது. பாம்பாட்டியை வைத்து அந்த பாம்பு பிடிக்கப்பட்டுள்ளது. அது நல்ல பாம்பு என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்த பள்ளி பாழடைந்த நிலையில் உள்ளதால் அதில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று நான் தலைமை ஆசிரியருக்கு 6 மாதங்களுக்கு முன்பே கடிதம் எழுதினேன். ஆனால் இடப் பற்றாக்குறையால் அந்த கட்டிடத்தில் எனது அனுமதி இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றார். 

லோகேஷின் குடும்பத்துக்கு பஞ்சாயத்து சார்பில் ரூ.1,000, எம்.எல்.ஏ. சார்பில் ரூ.5,000 வழங்கப்பட்டது. மேலும் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு மாவட்ட நிர்வாகம் ரூ.50,000 இழப்பீடு அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: