தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வேப்பலோடை பகுதியில் சுமார் 15 கிலோ அளவில் பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் தீவிர கண்காணிப்பில் தூத்துக்குடி பள்ளி அருகே அனாதையாக நின்ற மர்மவேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூத்துக்குடி அருகே தருவைகுளம், வேப்பலோடை பகுதிகளிலுள்ள கண்மாயில் இருந்து பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கிலோ கணக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆடுமேய்ப்பவர்கள் ஓடை பகுதியில் கிடந்த பழைய தோட்டாக்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் சம்பவஇடத்திற்கு வந்த எஸ்.பி.,ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அப்பகுதியில் உருக்குலைந்த துருப்பிடித்த நிலையில் கிடந்த பயனற்ற பழைய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் மூட்டையாக கட்டி அள்ளிச்சென்றனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் பயனற்று கிடந்த தோட்டாக்கள் அரபு நாட்டில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதியான பழைய இரும்பு கழிவுகளுடன் கலந்து வந்துள்ளது என்பதும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த இப்பொருளை திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
பொதுநலன்கருதி சமூகஆர்வலர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து துப்பாக்கி தோட்டாக்களை அரபு நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவை பெற்றனர். இருந்தபோதும் சில பழைய இரும்பு வியாபாரிகள் அனுப்புவதற்கு முன்வராமல் அவற்றை தூத்துக்குடியை சுற்றியுள்ள காட்டுப்பகுதி ஓடைகளில் வீசியுள்ளனர்.
கோடைகாலத்தில் ஓடைகள் தண்ணீரின்றி வறண்டு போனதால் துப்பாக்கி தோட்டாக்கள் வீசப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஈராக் போரின்போது பயன்படுத்தப்பட்ட பழைய துப்பாக்கி தோட்டாக்கள் கிலோ கணக்கில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.