லண்டன்: அண்டார்டிகாவில் கடந்த 1,000 ஆண்டுகளி்ல் இல்லாத அளவுக்கு இந்தக் கோடை காலத்தில் பனிக் கட்டிகள் மிக வேகமாக கரைந்து வருகின்றன.
ஆஸ்திரேலிய (Australian National University) மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு (British Antarctic Survey) இதனைக் கண்டுபிடித்துள்ளது.
அண்டார்டிகாவில் கடந்த 600 ஆண்டுகளில் வெப்பத்தின் அளவு 1.6 டிகிரி சென்டிகிரேட் உயர்ந்துள்ளது. அதிலும் கடந்த 50 ஆண்டுகளில் தான் வெப்ப அளவு அதிகரிப்பு வேகம் பிடித்துள்ளது.
அண்டார்டிகாவின் வட முனைப் பகுதியில் உள்ள ஜேம்ஸ் ராஸ் தீவில் 1,197 அடிக்கு பனிக்கட்டிகளை டிரில் செய்து, குடைந்து, இந்தப் பகுதியின் கடந்த கால வெப்பத்தையும் தற்போதைய வெப்பத்தையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளது இந்த ஆராய்ச்சிக் குழு. கடந்த 1000 ஆண்டுகளில் இந்தப் பகுதியின் பனி உறைந்தது, பின்னர் உருகியது என நடந்த காலநிலை மாற்றங்கள், அந்தப் பனிப் பாறைகளில் அடுக்குகளை உருவாக்கியுள்ளது.

இந்த பாறை அடுக்குகளின் தடிமனை வைத்து எவ்வளவு பனி உருகியது என்பதை கணக்கிட முடிந்துள்ளது. இதன்படி அண்டார்டிக்கா பகுதியில் பனி மிகக் குறைந்த அளவு உருகியதும், வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்ததுவும் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தான் என்று தெரியவந்துள்ளது.

இதில், கடந்த 50 ஆண்டுகளில் தான் அண்டார்டிகா பனி உருகுவது 10 மடங்கு அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால், அண்டார்டிகா பனிப் பகுதியின் வெப்பம் அதன் தாங்கும் சக்தியை விட அதிகமாகிவிட்டது. அங்கு மிகச் சிறிய அளவிலான வெப்ப நிலை அதிகரிப்பு கூட மிக அதிகமான பனி உருகும் நிலையை உருவாக்கிவிடுகிறது. இது ஒட்டுமொத்தத்தில் பூமியின் வெப்ப நிலை அதிகரித்துவிட்டதையே மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்கிறார் இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான நெரில் ஆப்ராம்.