சென்னை: சென்னையிலிருந்து பஹ்ரைனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பயணி அணிந்திருந்த கோட்டில், கருந்தேள் இருந்துள்ளது. அது கடித்து அந்த பயணி அலறி மயக்கமுற்றார். இதையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது.சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைனுக்கு கல்ப் ஏர் விமானம் புறப்பட்டது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் அதில் பயணித்த ஆந்திராவைச் சேர்ந்த வித்யாசாகர் என்ற பயணியை ஏதோ கடிப்பது போல உணர்ந்துள்ளார். என்ன என்று பார்த்தபோது அவரது கோட்டில் கருந்தேள் ஒன்று இருந்தது.
இதைப் பார்த்து அவர் அலறினார். உடனடியாக அருகில் இருந்த பயணிகள் சேர்ந்து அந்த கருந்தேளை அடித்துக் கொன்று விட்டனர். இருப்பினும் கருந்தேள் கடித்த வித்யாசாகர் மயக்கமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. வித்யாசாகரை மருத்துவமனையில் போய்ச் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தேள் ஒன்றால் விமானம் தரையிறக்கப்படுவது சென்னை விமான நிலையத்தில் இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.