கனடாவின் தீவுப் பகுதியில் கடற்கரையில் ஒரு சிறிய லாரி கண்டெய்னர் கரை ஒதுங்கியது. அதற்குள் இந்த ஹார்லி டேவிட்சன் பைக் துருப்பிடித்த நிலையில் இருந்தது. சுனாமியில் அடித்து வரப்பட்ட இந்த கண்டெய்னருக்குள் இந்த பைக் சிக்கிக் கொண்டு கனடாவை அடைந்துள்ளது. இந்த பைக்கின் புகைப்படம் மற்றும் நம்பரை வைத்து ஜப்பானில் அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். யோகோயாமா என்பவருக்குச் சொந்தமான அந்த பைக் ஒரு வருடத்திற்கும் மேலாக பசிபிக் கடலில் பயணித்து கனடாவை அடைந்துள்ளது. ஆனால் இதில் சோகம் என்னவென்றால் சுனாமியில் யோகோயாமா தனது குடும்பத்தையே இழந்துவிட்டார் என்பதாகும். அவர் இப்போது ஜப்பானின் மியாகி பகுதியில் ஒரு தாற்காலிக குடியிருப்பில் தான் வசித்து வருகிறார். கடந்த மாதம் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் கடலோரத்தில் வந்து குவிந்த சுனாமி குப்பைகளில் கால்பந்து ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. அதுவும் சுனாமியில் ஜப்பானில் இருந்து அடித்து வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பந்தும் சுமார் 5,000 கிலோ மீட்டர்கள் பயணித்து அங்கு வந்து சேர்ந்தது. அதே போல கடந்த மாதம் ஒரு ஜப்பானிய படகு சுனாமியில் இழுத்து வரப்பட்டு அலாஸ்கா பகுதியை அடைந்தது. இந்தப் படகால் மற்ற கப்பல்களுக்கு பிரச்சனை வரும் என்பதால் அதை அமெரிக்க கடற்படை குண்டு வைத்து தகர்த்ததும் குறிப்பிடத்தக்கது. ஜப்பான் சுனாமி வாரிச் செல்லப்பட்ட பல பொருட்கள் பசிபிக் கடலில் மிதந்து வருகின்றன. இப்போது கடலின் நீரோட்டம் வட கிழக்காக உள்ளதால், இந்தப் பொருட்களில் பெரும்பாலானவை பசிபிக் கடலின் மறுமுனையான அலாஸ்கா, கனடா, வாஷிங்டன், ஓரேகான் உள்ளிட்ட பகுதிகளை 2013-14ஆம் ஆண்டுகளில் கரைசேரும் என்றும் கூறப்பட்டது என அமெரிக்க அரசின் கடல்சார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ![]() ![]() ![]() |



