குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்?-உச்சநீதிமன்றம் கேள்வி!

புதுடெல்லி:குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்(டோல் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் ஃபீஸ் குறித்து பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது.
இவ்வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் அனில் ஆர்.தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக நேற்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள் கூறியது: “எந்த அடிப்படையில், எதற்காக இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது எவ்வளவு காலத்துக்கு வசூலிக்கப்படும் என்ற விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது கட்டுமான நிறுவனத்துக்கும், குத்தகைதாரர்களுக்கும் மட்டும் உரியது என்று இருத்தல் கூடாது.
மோசமான சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசின் கொள்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. சாலைகளின் அமைப்பு மற்றும் தரம் சரியில்லாதது ஆபத்தான விபத்துகளைக் கூட ஏற்படுத்துகின்றன. நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் முறையற்ற கட்டணம் வசூலிக்கப்படுவது அதிருப்தி அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசு முதலில் எட்டு வழிச் சாலை அமைத்தது. இப்போது சில பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதுபோன்று இருப்பினும் அரசு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு 10-15 கிலோமீட்டருக்கு ஒரு பகுதியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தைப் பறிப்பதாக உள்ளது. சிறந்த சாலைகளை அமைத்துத் தருவது நிதியை திரட்டுவதற்காக அல்ல என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பீம் சிங், வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது லாபகரமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற எந்த விவரங்களையும் சுங்கச்சாவடிகளில் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: