மக்கள் துரத்தியதில் யானையின் வயிற்றில் இருந்த குட்டி உயிரிழந்தது! பயத்தில் ஓடிய சிறுவர்கள் மரணம்!




 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கருமந்துறை மலைப்பகுதிக்கும் வழிதவறி வந்த 5 பெண் யானைகள் மற்றும் 2 ஆண் குட்டியானைகள் கூட்டம் கடந்த ஒரு வாரமாக கரியகோயில் அணைக்கட்டுக்கு பக்கத்திலேயே தங்கிக்கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது. 

இந்த யானைகளை வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் 4 முறை அரூர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனால் அந்த யானை கூட்டம் மீண்டும் கருமந்துறை வனப்பகுதிக்குள்ளே திரும்பி வந்து விடுகிறது.

அடர்ந்த காடுகள் இல்லாமல் முற்றிலும் விவசாய நிலங்களாக இருப்பதால் யானைகளுக்கு தேவையான உணவு சிரமம் இல்லாமல் கிடைத்துவிடுகிறது. இங்குள்ள விவசாய தோட்டங்களுக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை வேரொடு பிடுங்கி துவம்சம் செய்துவருகிறது. தோட்டத்து வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த நெல்மூட்டைகளையும் தூக்கி சூறையாடி வருகிறது.

இதற்கிடையே நேற்று கருமந்துறை பகுதியில் சுற்றி திரிந்த யானைகள் குளம்பங்கரை, நடுப்பட்டி பகுதி வழியாக ஏரிவளைவு கிராமத்தில் உள்ள ராக்கோடு பகுதிக்கு நுழைந்தது. அங்கு ஆண்டி, ரவீந்திர குமார் என்பவரின் 200 ஏக்கர் விவசாய நிலத்தில் யானை கூட்டங்கள் புகுந்துள்ளது.

இதனை பார்த்ததும் அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தங்கி இருந்த மகேஷ், இளைய கண்ணு, பெரிய தம்பி ஆகியோர் குடும்பத்துடன் தப்பி கருமந்துறை சென்று ஊருக்குள் தஞ்சம் புகுந்தனர்.

இப்போது கோடைகாலமாக இருப்பதால், இவர்களின் தோட்டத்தில் விவசாயம் எதுவும் செய்யவில்லை. உணவில்லாமல் பசியுடன் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்த யானைக்கூட்டத்திற்கு இங்கே திண்பதற்கு எதுவும் கிடைக்க வில்லை. இதனால், தோட்டத்தில் இருந்த 3 குடிசை வீட்டுகளையும் பிடுங்கி எரிந்து அடித்து நொறுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது. மேலும் தின்பதற்கு எதுவும் கிடைக்குமா என துளாவிய யானைகளுக்கு அரிசி சாக்கு மட்டுமே கிடைத்தது.

அந்த அரிசியை கொஞ்சம் தின்றுவிட்டு, ஒரு வழியாக சமாதானம் அடைந்த யானைகள் அங்கிருந்த மூங்கில் தோப்புக்குள் சென்றுவிட்டது.

நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து தெற்கு பக்கம் உள்ள அருணாமலை என்ற இடத்தில் யானைகள் புகுந்தபோது அந்த கூட்டத்தில் கருவுற்றிருந்த பெண் யானை குட்டியை ஈன்றது. இதனால் மற்ற யானைகள் அந்த பகுதியை விட்டு நகராமல் அந்த இடத்திலேயே நின்றுள்ளது.

யானைகள் குட்டி போட்டால் அந்த இடத்தை விட்டு எளிதில் அகலாது. குறைந்தது 3 மாதம் வரை அங்கேயே இருக்கும். இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வீடுகட்டி தங்கி இருப்போர் வீட்டை காலி செய்து விட்டு ஊருக்குள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தண்டோரா போட்டு மக்களுக்கு அறிவிப்பு கொடுத்தனர்.

இந்த யானைகளின் நடமாட்டம் பற்றி தினமும் கண்காணித்து வரும் பென்னாகரத்தை சேர்ந்த வேட்டை தடுப்பு குழுவின் வீரர் சின்னண்ணன் என்பவர் நேற்று மதியம் 12.00 மணியளவில் யானைகள் தற்போது நின்றுகொண்டுள்ள இடத்திலிருந்து வேறு இடத்துக்கு சென்றுள்ளது என்பதை கண்டுள்ளார்.

அப்போது அந்த இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானை குட்டி போட்டுள்ளது என்பதற்கு அடையாளமாக அதன் நஞ்சுகொடியை பார்த்துள்ளனர். இன்னும் கொஞ்ச தூரம் சென்று பார்த்தபோது இறந்து கிடந்த யானைக்குட்டியையும் பார்த்துள்ளனர். அப்போது மனிதர்களின் நடமாட்டம் பற்றி யானை தெரிந்து கொண்டு குட்டி கிடந்த இடத்துக்கு யானைகள் திரும்பி வந்துள்ளது. அதனால், இறந்து கிடந்தது பெண் யானை குட்டியா, ஆன் யானை குட்டியா அந்த குட்டி எதனால் இறந்தது என்பது பற்றிய விபரங்களை வனத்துறையினரால் தெரிந்துகொள முடியவில்லை.

தன்னுடைய குட்டி இறந்து விட்டது என்பது அந்த பெண் யானைக்கு இன்னும் தெரியாது. இறந்து போன குட்டியின் உடலிலிருந்து நாற்றம் வீசிய பிறகுதான் பெண்யானை மற்றும் யானைக்கூடம் அந்த இடத்திலிருந்து வெளியேறும், அதன் பிறகுதான் குட்டியானையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு நடத்த முடியும் என்று வேட்டை தடுப்பு வீரர்கள் கூறுகின்றனர்.

அதுவரை இப்போது உள்ள இடத்தை விட்டு யானைகள் செல்ல வாய்ப்பில்லை, அதே நேரத்தில் தனது குட்டி இறந்து விட்டது என்று தெரிந்தால் யானையின் கோபம் இன்னும் அதிகமாகும் அப்போது யாரை பார்த்தாலும் விரட்டியடிக்கும் என்பதால் குட்டி இறந்து கிடக்கும் இடத்துக்கு பக்கத்தில் யாரையும் விடாமல் வனத்துறையினர் காவலிருந்து வருகிறார்கள்.

யானைகளை விரட்டுகிறோம் என்று ஆங்காங்கே வனத்துறையினரும், பொதுமக்களும் வெடிவைத்தும், தாரை தப்பட்டைகளுடனும் கூட்டம் கூடமாக சென்று கருவுற்றிருந்த யானையை ஒரு இடத்தில் நிற்க விடாமல் விரட்டி வந்தனர், அது எங்கே செல்வது என்று தெரியாமல் வனத்துக்குள் கண்ட இடங்களுக்கு எல்லாம் ஓடிகொண்டே இருந்ததால் தான் இந்த குட்டி இறந்துள்ளது என்பது தெரிகிறது.

இதற்கிடையில், காட்டு யானை ஊருக்குள் வருகிறது என்று கிளப்பிய பீதியில், இரு பள்ளி மாணவர்கள், கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஓன்று நடந்துள்ளது. கல்வராயன்மலையில் உள்ள வடக்குநாடு கிராமத்தில் உள்ள 12 வது வார்டு பெருஞ்சி நாட்டான்வளவு என்ற ஊரை சேர்ந்த கோவிந்தராஜ். என்பவரது மகன் முகிலன் (வயது 7), இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் சூர்யா (வயது 10), இவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த சிறுவர்கள் இருவரும்,  வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஏறிவளவு பகுதியிலிருந்து  காட்டு யானைகள் தங்கள் ஊருக்கு வருவதாக பொதுமகள்  பீதியை கிளப்பியுள்ளனர்.

அதனால், பயந்துபோன அந்த சிறுவர்கள் இருவரும் வீட்டுக்கு போகலாம் என்று குறுக்கு பாதையில் தப்பி ஓடியபோது, வெள்ளையன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளனர்.

இரவு வெகுநேரமாகியும், சிறுவர்கள் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் அவர்கள் வழக்கமாக சென்று விளையாடும் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. இந்நிலையில், அவர்ககுள் செல்லும் பாதையில் உள்ள கிணறுகளில் சென்று பார்த்தபோது, விவசாய கிணற்றில் சிறுவர்களின் உடல் மிதந்துள்ளது. தகவலறிந்த கருமந்துறை போலீஸார் மற்றும் பொதுமக்கள், கிணற்றிலிருந்து சிறுவர்களின் உடலை மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து, கருமந்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம், அப்பகுதி மக்களை மிகுந்த அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: