சென்னை: வேலையின்மை, வறுமை காரணமாக தமிழகத்தில் ஆண்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. அதிலும் தீக்குளித்து உயிரை விடும் வழிமுறையை தேர்ந்து எடுப்பதில் பெண்களுக்கு ஈடாக ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணைய கணக்கெடுப்பின்படி கடந்த 5 ஆண்டுகளில் தீக்குளித்து இறக்கும் ஆண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும்போது, இருபாலரின் தற்கொலையிலும், தமிழகம்தான் முன்னிலையில் இருந்து வருகிறது.
தீக்குளித்து மரணம்
தமிழகத்தில் கடந்த 2005-ல் 875 பெண்களும், 384 ஆண்களும் தீக்குளித்து இறந்துள்ளனர். 2010-ம் ஆண்டில் 1,625 பெண்களும், 863 ஆண்களும் தீக்குளித்து உயிரை விட்டுள்ளனர். கடந்த 2010-ல் இந்திய அளவில் 4137 ஆண்களும், 7,748 பெண்களும் தீக்குளித்து பலியாகி உள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
சென்னையில் அதிகம்
தமிழகத்தை பொருத்த வரை, தலைநகர் சென்னையில்தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சென்னையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2011-ல் மட்டும் 1,300 தீக்காய மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 230 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தைரியமான மனநிலை
எந்த பிரச்சனை என்றாலும் அதை சமாளிக்க தைரியம் இல்லாதவர்கள்தான் தற்கொலை என்ற முடிவை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் குடும்பத்தில் பிரச்சினையினாலும், வரதட்சனை கொடுமையினாலும் அதிக அளவில் பெண்கள் தற்கொலையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் சமீப காலமாக ஆண்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. தூக்குப் போட்டு கொள்வது, விஷம் குடிப்பது, உயரமான கட்டிடங்களில் இருந்து கீழே குதிப்பது, ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்ப்பது போன்ற நிலைகள் குறைந்து, தீக்குளிப்புகள் அதிகரித்துள்ளன.
விரக்தி, வேலையின்மை, வறுமை, தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால் ஆண்கள் இந்த முடிவுக்கு வருகின்றனர். தற்கொலை செய்து கொள்ள தேர்ந்து எடுக்கும் வழி முறைகளும் மாறியுள்ளதாக கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள். தற்கொலை எண்ணத்தை மாற்ற மாநிலத்தில் ஆங்காங்கே கவுன்சிலிங் மையங்கள் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.