மாருதி 800 காருக்கு மாற்றாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குட்டிக் காரை வரும் தீபாவளி பண்டிகையின்போது அறிமுகப்படுத்துகிறது மாருதி.மாருதி 800 காரின் வரலாறு விரைவில் முடிவுக்கு வருகிறது. கடந்த மாதத்துடன் 800 காரின் உற்பத்தியை மாருதி நிறுத்தி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், மாருதி 800 காருக்கு மாற்றாக ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குட்டிக் காரை மாருதி வடிவமைத்துள்ளது.
செர்வோ என்று குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வரும் இந்த காரின் சோதனை ஓட்டங்களை மாருதி ரகசியமாக நடத்தி வருகிறது. அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஆல்ட்டோ காரைவிட குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது.
இந்த காரில் சுஸுகியின் 660 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டீசல் மாடலிலும் அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டால் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் குறைந்த விலை டீசல் காராக புதிய 800 மாறும். இந்த கார் ரூ.2 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்று ஆட்டோ வட்டாரங்கள் பரபரக்கின்றன.