மதுரை ஆதீனம் மடத்திற்குள் வைஷ்ணவி மீது நித்தியானந்தா சீடர்கள் தாக்குதல்?







மதுரை: மதுரை ஆதீனத்தின் செயலாளராக கூறப்படும் வைஷ்ணவி மீது நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தி சுடிதாரை கிழித்து விட்டதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து சென்றனர். பத்திரிக்கையாளர்களை நித்தியானந்தாவின் ஆட்கள் ஆதினத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதற்கு மதுரை ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் மூண்டதாக கூறப்படுகிறது.

மதுரை ஆதீன மடம் பெரும் மர்மக் கூடமாக மாறி வருகிறது. உள்ளே என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை, தெரியவில்லை. மதுரை ஆதீனத்தின் செயலாளராக இருப்பவர் இளம் பெண் வைஷ்ணவி. இவர் இடையில் காணாமல் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார் என்பது சமீபத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை மூலம் தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று மதுரை ஆதீன மடத்திற்குள் வைஷ்ணவியை நித்தியானந்தாவின் ஆட்கள் சரமாரியாகத் தாக்கி உதைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மடத்திற்குள் ஒரு ஆதீனத்தின் தனி அறையின் சாவியை வைஷ்ணவிதான் வைத்திருக்கிறார். திருவண்ணாமலையில் நித்தியானந்தாவிற்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக போய் விட்டார் மதுரை ஆதீனம். மடத்தில் வைஷ்ணவி மட்டும்தான் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது பாதுகாப்புக்கு நித்தியானந்தாவின் ஆட்களை நிறுத்தி வைத்திருந்தனராம்.

இந்தநிலையில் தனி அறையின் சாவியை வைஷ்ணவியிடம் நித்தியானந்தாவின் ஆட்கள் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் தர மறுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த நித்தியானந்தாவின் ஆட்கள் வைஷ்ணவியை பெண் என்றும் பாராமல் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அணிந்திருந்த சுடிதார் கிழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செல்போன் மூலம் மதுரை போலீஸாருக்கும், ஆதீனத்திடம் உதவியாளராக இருந்து பின்னர் வெளியேற்றப்பட்டவரான ராமராஜ் மற்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோருக்கு கதறியழுதபடி தகவல் கொடுத்துள்ளார் வைஷ்ணவி.

இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். இந்து மக்கள் கட்சியினரும் மடத்திற்கு வெளியே திரண்டு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.

தகவல் அறிந்து விரைந்து வந்த பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்க நித்தியானந்தா ஆதரவாளர்கள் மறுத்தனர். இதற்கு ஆதீனத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் மூண்டது. இதனால் மதுரை ஆதீன மட வளாகத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய பத்திரிக்கையாளர்களால் முடியவில்லை.

இந்த நிலையில் தகவல் அறிந்து ஆதீனமும், நித்தியானந்தாவும் விரைந்து வந்தனர். அவர்கள் வைஷ்ணவியிடம் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, நித்தியானந்தா ஆதரவாளர்களால் வைஷ்ணவிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்து மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். அவரை மீட்டுவெளியே கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நித்தியானந்தாவின் ஆதரவாளர்களை உடனடியாக மடத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: