பெங்களூர்: பெங்களூரில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஹெய்ஸ்னம் ஜேக்கப் என்ற மாணவர் தூக்கில் தொங்கிய உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதியன்று மணிப்பூர் மாநில முதல்வர் முகுல் சங்மாவின் உறவினரான லோய்தம் என்ற மாணவி மர்மமான முறையில் பெங்களூரில் உயிரிழந்தார். அவர் பெங்களூரில் பல்கலைக் கழகம் ஒன்றில் படித்து வந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டங்களும் நடைபெற்றது. இந்த மாணவரின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முகுல் சங்மா கோரிக்கை விடுத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வடகிழக்கு மாநில மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த ஹெய்ஸ்னம் ஜேக்கப் என்ற பொறியியல் கல்லூரி மாணவர் அவர் தங்கியிருந்த விடுதியில் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஹெய்ஸ்னம் ஜேக்கப்பின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.