ஸ்டீயரிங் வீலுடன் போராடி கைகள் ஓய்ந்து போன டிரக் டிரைவர்களின் தலையெழுத்தை மாற்றும் வகையில், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 18 புதிய டிரக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டெய்ம்லர் தெரிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் டிரக்குகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜெர்மனியை சேர்ந்த டெய்ம்லர் நிறுவனம் டெய்ம்லர் பிராண்டில் வர்த்தக வாகனங்களையும், மெர்டிசிஸ் பென்ஸ் பிராண்டில் கார்களையும் விற்பனை செய்து வருகிறது. அந்தந்த மார்க்கெட்டுக்கு தக்கவாறு வடிவமைப்பை மாற்றி டிரக்குகளை தயாரிப்பதால், டெய்ம்லர் நிறுவனம் டிரக் விற்பனையில் உலக அளவில் முன்னிலை வகிக்கிறது.
இந்தநிலையில், இந்தியாவில் டெய்ம்லர் நிறுவனம் டிரக் தயாரிப்பில் இறங்கியுள்ளது. மஹாராஷ்டிராவிலுள்ள ஆலையில் இருந்து பஸ்களை தயாரித்து வந்த நிலையில், தற்போது 'பாரத் பென்ஸ்' என்ற புதிய பிராண்டில் டிரக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது டெய்ம்லர்.
இதற்காக, ரூ.4,500 கோடி முதலீட்டில் சென்னை அருகே பிரம்மாண்ட ஆலையையும் கட்டியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த புதிய ஆலையை சமீபத்தில் திறந்து வைத்தார். தற்போது 1,400 பணியாளர்களுடன் உற்பத்தியை துவங்க இருக்கும் ஆலையை, விற்பனையை பொருத்து விரிவாக்கம் செய்யவும் டெய்ம்லர் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 18 மாதங்களில் 18 புதிய உலகத் தரம் வாய்ந்த டிரக் மாடல்களை பாரத் பென்ஸ் பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக டெய்ம்லர் தெரிவித்துள்ளது. 7முதல் 16 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட இலகு ரக டிரக்குகள் மற்றும் 25 முதல் 49 டன் எடை சுமக்கும் திறன் கொண்ட கனரக டிரக்குகளை அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஆண்டுக்கு 36,000 டிரக்குகள் தயாரிக்கும் திறன் கொண்ட சென்னை ஆலையில் ஆண்டுக்கு 12,000 இலகு ரக டிரக்குகளும், 24,000 கனரக டிரக்குகளும் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தனது டிரக்குகள் மூலம் இந்திய டிரைவர்களின் தலையெழுத்து மாறு்ம் என்று டெய்ம்லர் குறிப்பிட்டுள்ளது.