குட்டீஸ் எப்பவும் கம்யூட்டர் முன்னாடியே இருக்காங்களா?- கவனச் சிதறல் வரும்!

 அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே போய் விளையாடாமல் வீட்டில் டிவியும், கம்யூட்டருமே பழியாக கிடக்கின்றனரா உங்கள் குழந்தைகள் உடனடியாக அவர்களுக்கு வேறு விளையாட்டுக்களை அறிமுகம் செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு அட்டென்சன் டிசார்டர் எனப்படும் கவனச் சிதறல் நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

பள்ளி விடுமுறை விட்ட நாள் முதலே கம்யூட்டரில் ரைம்ஸ், கேம்ஸ் என புகுந்து விளையாடுகின்றனர் குட்டீஸ்கள். யூ டியூப்பில் ரைம்ஸ் எல்லாமே கோடியை தாண்டி ஹிட்டடிக்கின்றன. குழந்தைகள் வெளியில் செல்லாமல் இருப்பது ஒருபுறம் நன்மையை அளித்தாலும், இப்படி கம்யூட்டர், வீடியோ, டிவி என நாள் முழுவதும் பழியாக கிடப்பது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எப்பொழுதும் கம்யூட்டர், டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு ஏற்படும். சில சமயம் அதீதமாக ஆக்டிவாக இருப்பதும் (hyperactive) முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது (impulsive behaviour) போன்ற குறைபாடுகளும் இருக்கும். மேலும் குழப்பமான மனநிலை போன்றவற்றை உருவாக்கும்

ADD என்பது உளவியல் ரீதியான குறைபாடு. இந்த குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முறையான மருத்துவம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள், சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும் நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால் பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும் இந்த மனோபாவம் தொடரும் என்று எச்சரிக்கின்றனர் உளவியாளர்கள்.

பல வருடங்களாகச் செய்த ஆய்வறிக்கையின் படி குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது. நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த அளவுக்கு வேகமான மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல் போகிறது.

தொலைக்காட்சி, கம்யூட்டர் போன்றவைகளின் முன் அதிகமாக இருப்பதால் புத்தகம் படித்தல், குறுக்கெழுத்து எழுதுதல், போன்ற மூளைக்கு பயன்தரும் வேலைகளை செய்ய விடாமல் செய்து விடும். தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம், நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கூட சரி அது பாதிப்பைத் தருகிறது.

வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட இதே விளைவைத் தருகின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். நிஜவாழ்க்கையில் அதையே எதிர்பார்க்கும் குழந்தைகள் குறைவான வேகமுடைய உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு சீக்கிரமாக போரடிக்க ஆரம்பித்து விடும். ஓரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய முடியாது. முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச் செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால் அதை செய்ய மாட்டார்கள்.

பெரும்பாலான குழந்தைகள் பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். குழப்பமான மனநிலையில் பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம் பெற்றோருக்கு வரும்.முறையான பயிற்சி, சரியான மருத்துவத்தின் மூலம் குழந்தைகளின் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். ஆசிரியரும் பெற்றோரும் கூட குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும் என்பது உளவியலாளர்களின் அறிவுறுத்தலாகும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: