டெல்லி: உலகம் முழுவதும் உபயோகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுவிட்டன. ஏர் இந்தியாவும் தான் புதிதாக வாங்கிய 6 விமானங்களையும் தரையிறக்கிவிடப்பட்டது.
உலகின் மிகச் சிறந்த விமானம்

போயிங் ட்ரீம்லைனர் விமானம் தான் உலகிலேயே மிகக் குறைவான எரிபொருளை பயன்படுத்தும், 290 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடிய விமானமாகும். விமானத்தின் எடையைக் குறைக்க அதன் பெரும்பாலான பகுதிகள் கார்பன் பைபர் காம்போசிட் மெட்டீரியல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக ஓசை எழுப்பாத விமானமாகவும் இது திகழ்கிறது. ஏகப்பட்ட காலதாமதத்துக்குப் பின்னரே இந்த விமானத்தின் உற்பத்தி தொடங்கியது.

இந்த விமானத்தை ஜப்பானின் ஏஎன்ஏ நிறுவனம் (All Nippon Airways) தான் முதன்முதலில் வாங்கியது. இரு தினங்களுக்கு முன் இந்த நிறுவனத்தின் ட்ரீம்லைன் விமானம் தென் மேற்கு ஜப்பானின் தகாமாட்சு அருகே பறந்து கொண்டிருந்தபோது அதன் காக்பிட் அறையிலிருந்து புகை கிளம்பியது. மேலும் கருகும் வாசனையும் விமானம் முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

பேட்டரியில் பிரச்சனை: இந்த விமானத்தின் பேட்டரிகளில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏஎன்ஏ விமான நிறுவனம் தன்னிடம் உள்ள 17 ட்ரீம்லைனர் விமானங்களையும் தரையிறக்கிவிட்டது. மேலும் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது 7 ட்ரீம்லைனர் விமானங்களையும் தரையிறக்கிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 50 ட்ரீம்லைனர் விமானங்களில் 24 விமானங்களை ஜப்பான் தரையிறக்கிவிட்டது.

பாதி விமானங்கள் தரையிறக்கம்: மேலும் அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அமைப்பு அந் நாட்டில் இயங்கும் 6 ட்ரீம்லைனர் விமானங்களை தரையிறக்க உத்தரவிட்டுவிட்டது. இதனால் உலகம் முழுவதும் இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான விமானங்கள் தரையிறக்கப்பட்டுவிட்டன.

இந்தியாவும் நடவடிக்கை: ஜப்பானில் நடந்த சம்பவம், அமெரிக்க அரசின் உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஏர் இந்தியாவும் சமீபத்தில் வாங்கிய தனது 6 புதிய ட்ரீம்லைனர் விமானங்களையும் நேற்று தரையிறக்கிவிட்டது.

மறுஆய்வுகள் ஆரம்பம்: இதையடுத்து இந்த விமானத்தின் பாதுகாப்பு குறித்து போயிங் நிறுவனமும் அதைப் பயன்படுத்தும் நாடுகளின் பொறியாளர்களும் இணைந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிரச்சனைகள் களையப்படும் வரை எந்த நாடும் இந்த விமானத்தை மீண்டும் இயக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
