சிவகங்கை: ஆறு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வடமாநிலக் கொள்ளையர்களை லாக்அப்பில் வைத்துவிட்டு இன்ஸ்பெக்டர் தூங்கிவிட்டதால், திருப்பாச்சேத்தி காவல்நிலையத்தில் இருந்த போலீசாரை தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் தனியார் டெக்ஸ்டைல்மில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதனை ஈரோடைச் சேர்ந்த சுந்தரராமசாமி என்பவர் செய்து வருகிறார். கடந்த 6 மாதகாலமாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொழிலாளர்களுக்கு திருப்பாச்சேத்தி அருகில் உள்ள பச்சோரி கிராமத்தில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்து விநியோகிப்பது வழக்கம். சுந்தர ராமசாமியிடம் பணிபுரியும் சிவப்பிரகாசம், துளசிமணி ஆகிய இருவரும் வழக்கம் போல 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.
மதியம் 2 மணியளவில் அவர்களை 5பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. அப்போது இருவரும் சத்தம் போடவே ஒருவன் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டான். இரண்டு பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். நேற்றிரவு ஒருவனை போலீசார் பிடித்தனர். பணத்துடன் தப்பியோடியவனையும் மற்றொருவனையும் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் மூன்று பேரையும் திருப்பாச்சேத்தி போலீஸ் லாக் அப்பில் அடைத்துவிட்டு ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணியளவில் கொள்ளையர்கள் இரண்டு பேர் டீ வாங்கித்தருமாறு கேட்டுள்ளனர். ஸ்டேசனில் இருந்த ஏட்டு சக்ரவர்த்தி டீ வாங்கிக் கொடுத்துள்ளார். அவர் கதவை திறந்த உடன் உள்ளே இழுத்துப்போட்டு கொள்ளையர்கள் அடித்துள்ளனர். இதனையடுத்து சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த சவுந்தரராஜ் என்ற போலீசையும் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். அடிவாங்கி காயத்துடன் இருந்த போலீசாரை திருப்பாச்சேத்தி கிராம மக்கள் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதில் ஏட்டு சக்ரவர்த்தியின் கை முறிந்துவிட்டுதாக கூறப்படுகிறது. தப்பியோடிய இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களின் பெயர் ரஞ்சன் பதான், சங்கர் ட்வைன் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது
.
.