நிறம் மாறும் அமெரிக்கா: நூற்றாண்டு கால அரசியல் மாற்றங்கள்..

 வாஷிங்டன் (யு.எஸ்): நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அடிமையாக இருந்த ஒரு இனத்தில் பிறந்தவர் இப்போது அமெரிக்காவில் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியேற்கிறார் என்றால் அந்த மாற்றத்தை என்னவென்பது? கருப்பின மக்களின் முதல் அதிபராக, ஜனவரி 20ம் தேதி தனிப்பட்ட முறையில் பதவி ஏற்றுக் கொண்ட பராக் ஒபாமா, நாளை 21ம் தேதி பொது மக்கள் மத்தியில் பதவியேற்கிறார். இந்த வேளையில் அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்...


அடிமையாய் கிடந்த கருப்பின மக்கள் 1862 ஆம் ஆண்டு வரை ஒட்டு மொத்த கருப்பு இன மக்களும் அமெரிக்காவில் அடிமைகளாக நடத்தப்பட்டு, விலங்குகள் போல் சந்தையில் வாங்க, விற்கப் பட்டனர். தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் தேவைப்பட்டால், சந்தையில் போய் கருப்பு இன மக்களை பண்ணை முதலாளிகள் அடிமைகளாக வாங்கி வந்தனர். 1863ஆம் ஆண்டு ஜனவரி 1ம் நாள், அடிமைகள் விடுவிப்பு சட்டத்தை, குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் ஆணை பிறப்பித்தார். அப்போது கூட சில மாநிலங்களுக்கு விதிவிலக்கு இருந்தது. அமெரிக்க உள்நாட்டு போரில் மத்திய அரசை எதிர்த்து போரிட்ட மாநிலங்களில் ‘அடிமை விடுவிப்பு' சட்டம் முதலில் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக விடுதலையான கருப்பு இன மக்கள் ஆயிரக்கணக்கில் மத்திய அரசுப் படையில் சேர்ந்தனர். உள் நாட்டு போரும் முடிவுக்கு வந்தது. படிப்படியாக ஏனைய மாநிலங்களிலும் ‘அடிமை விடுவிப்பு' அமலுக்கு வந்தது. 

வாக்குரிமை இல்லை அடிமை அமைப்பிலிருந்து கருப்பு இன மக்களை விடுவித்தாலும், அவர்களுக்கு சரிசமமான உரிமை வழங்க லிங்கனால் முடியவில்லை. கடும் எதிர்ப்பு காரணமாக, கருப்பு இன மக்களை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றி 'ஹெய்ட்டி' கரிபியன் தீவுப் பகுதியில் குடியேற்ற முயற்சிகள் நடந்தன. சில ஆயிரம் பேர் குடியேற்றப்பட்டாலும் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

தோட்டத்திலிருந்து தொழிற்சாலைகளுக்கு... தோட்டங்களில் கடினமான வேலைகள் செய்து வந்த கருப்பு இன மக்கள், படிப்படியாக நகர்ப்புறங்களுக்கு குடியேறத் தொடங்கினர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை வேலைகளுக்கு மாறினர். ஆனாலும் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் பாவிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு வெள்ளையர்கள் பள்ளியில் இடமில்லை. பேருந்தில் முன் பகுதியில் அமர்ந்து செல்ல உரிமை இல்லை. எங்கும் எதிலும் பாகுபாடு. ஆங்காங்கு உரிமைகள் கோரி போராட்டம் நடைபெற்றது.


மார்ட்டின் லூதர் கிங் அடிப்படை உரிமைக்காக போராடிய கருப்பு இன மக்களை ஒன்றுபடுத்த வந்தார் மார்ட்டின் லூதர் கிங். முதன் முதலாக, பேருந்தில் சம உரிமை கோரி அலபாமா மாநிலம் பர்மிங்காமில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. கருப்பு இன மக்களின் நியாயமான கோரிக்கைக்காக வெள்ளை இன மக்களும் பெருவாரியாக கலந்து கொண்டனர். உரிமைப் போராட்டம அமெரிக்கா முழுவதும் பரவத் தொடங்கியது. மகாத்மா காந்திதான் எனது மானசீக குரு, அவருடைய அகிம்சை போராட்டம் மூலம், நமது உரிமைகளை பெறுவோம் என்று கருப்பு இன மக்களை ஒன்று திரட்டினார் மார்டின் லூதர் கிங்.  
பெருகிய வெள்ளையர் ஆதரவு அவரது வாஷிங்டன் 'கனவுப் பேச்சு' , உரிமைப் போராட்டத்தில் முக்கியமான மைல்கல். "ஒரு நாள் இந்த தேசத்தில் எனது நான்கு குழந்தைகளும் நிறத்தால் அல்லாமல், அவர்களது நடத்தையால் மதிப்பிடு செய்யப்படவேண்டும் என்பதுதான் எனது கனவு" என்று உரைத்த மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அரசியல்வாதிகளின் ஆதரவு பெருகியது. அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜான் எஃப் கென்னடியும் ஆதரவு தெரிவித்தார்.


கென்னடி கொண்டு வந்த சட்டம் அடிமையாக இருந்து விடுபட்ட இனம் சம உரிமை, வாக்குரிமை பெறுவதற்கு நூறாண்டுகள் தேவைப்பட்டது. 1963 ஆம் ஆண்டு ஜூன் 19ம் தேதி குடியரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி சட்டதிருத்த மசோதாவை உறுப்பினர்களுக்கு அனுப்பினார். ஆனால் அந்த மசோதா நிறைவேறும் முன்பாகவே சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார் கென்னடி. அடுத்து வந்த அதிபர் லிண்டன் ஜான்சன், கென்னடியின் எண்ணத்திற்கு சட்ட வடிவம் கொடுத்தார். மசோதா நிறைவேற்றப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜூலை 2ம் தேதி சிவில் உரிமைச் சட்டத்தில் லிண்டன் ஜான்சன் கையெழுத்திட்டார்.

வாக்குரிமைச் சட்டம் சிவில் உரிமைச் சட்டத்தின் மூலம் பள்ளிகள், பொது இடங்களில் கருப்பு இன மக்களுக்கு அனைத்து விதமான சம உரிமைகளும் கிடைத்தாலும், வாக்குரிமை கிடைக்கவில்லை. 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ம் தேதி, நிறைவேற்றப்பட்ட வாக்குரிமைச் சட்டம் மூலம், கருப்பு இன மக்கள் சம வாக்குரிமை பெற்றனர். அடுத்து நடந்த மாநில, மத்திய தேர்தல்களில் கருப்பு இன மக்கள் வாக்களித்து, முழு சுதந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கினர். ஆனாலும் கருப்பு இனத்தை சார்ந்தவர் ஒருவர் அதிபராக வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த ஆதங்கத்துடன், நகைச்சுவை நடிகர் கிரிஸ் ராக், 2004 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர், கருப்பு இனத்தை சார்த்தவர் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆவது போல் 'ஹெட் ஆஃப் ஸ்டேட்' என்று ஒரு படம் வெளியிட்டிருந்தார்.

மாறி மாறி ஆட்சி செய்யும் அரசியல் கட்சிகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக குடியரசுக்கட்சி, ஜனநாயக்கட்சி அதிபர்கள் மாறி மாறி அமெரிக்காவை ஆண்டு வருகின்றனர். சமீபத்திய அமெரிக்க வரலாற்றில், குடியரசுக் கட்சியின் அதிபரான ரொனால்டு ரீகன் மக்களின் ஆதரவு பெற்ற மிகப்பெரும் தலைவர். ஜனநாயகக் கட்சியின் பில் க்ளிண்டன், ஆட்சியில் அமெரிக்கப் பொருளாதாரம் உச்சியில் இருந்தது. அவரும் அமெரிக்க மக்களால் அதிகம் நேசிக்கப்படுகிறார். அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் ஆட்சி, ஈராக் போர், பொருளாதார வீழ்ச்சி என சமீப அமெரிக்காவின் மிகவும் கடினமான காலம் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர்.

சதிகள் கருப்பு இனத்தவர் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருப்பதை விரும்பாத தீவிர வலதுசாரி குடியரசுக்கட்சியினர், ‘ஒன் டைம் பிரசிடெண்ட் ஒபாமா' என்று கங்கனம் கட்டிக்கொண்டு தொடர்ந்து நான்கு ஆண்டுகளும் குழிபறிப்பு வேலைகளில் செயல்பட்டு வந்தனர். அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டு , நடுத்தர மக்க்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதே தனது லட்சியம் என்று செயல்பட்ட ஒபாமாவுக்கு, எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு கொடுக்காமல், அனைத்து விதத்திலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



வரலாற்றை மாற்றியமைத்த ஒபாமா எதிர்க் கட்சியினரின் சூழ்ச்சியை முறியடித்து, மக்கள் ஆதரவுடன் மீண்டும் இரண்டாவது தடவையாக வெற்றி பெற்ற ஒபாமா, கருப்பு இன மக்களுக்கு அமெரிக்க அரசியலில் மிகவும் முக்கியமான இடத்தையும் பெற்றுத் தந்துள்ளார். ஒபாமா தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு வரை, கருப்பு இன மக்கள் தேர்தலில் வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அவர்களை ஒன்று திரட்டி வாக்களிக்க வைத்து, 90 சதவீத கருப்பு இன மக்களின் ஆதரவை பெற்றதோடு மட்டுமல்லாமல், ஸ்பானிஷ் பேசும் லத்தீன் இனமக்களின் பேராதரவையும் பெற்றார். தவிர வெள்ளை இன பெண்கள், ஜனநாயகக் கட்சி மற்றும் பொது வாக்காளர்களில் வெள்ளை இன ஆண்களின் ஆதரவு என 51 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளார் ஒபாமா.  

மார்டின் லூதர் கிங் பிறந்த நாள் கொண்டாட்டத்துடன்... ஜனவரி 15ம் தேதி பிறந்த மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாள், ஜனவரி மாதம் மூன்றாவது திங்கள்கிழமை (இன்று) அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா ஜனவரி 20 ம் தேதி நடைபெற்றது. ஆனால் அது விடுமுறை நாளாக இருந்ததால் அடுத்த நாளான 21ம் தேதி பொது மக்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. இன்று நடந்தது தனிப்பட்ட பதவி ஏற்பு விழாதான். இப்படி இரு முறை அதிபர் பதவியேற்பது அமெரிக்காவில் இது நான்காவது தடவையாகும்.


லூதர் கிங் பைபிள் மீது ஆணை... முன்னதாக இரு முறை பதவியேற்றவர்கள் வில்சன், ஐசன்ஹோவர் மற்றும் ரீகன் ஆவார்கள். இந்த வகையிலும் ஒபாமாவின் இரண்டாவது பதவியேற்பு அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து விடுகிறது. கூடுதலாக கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங் பிறந்த நாள் அனுசரிக்கப்படும் நாளில், ஒரு கருப்பின அதிபர் இரண்டாவது முறையாக பதவியேற்பது, அவரது அகிம்சை வழி உரிமைப் போராட்டத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கிறது. அதை நினைவு கூறும் வகையில், மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்திய பைபிள் மீது ஆணையாக ஒபாமா பதவியேற்றுக் கொள்கிறார். கூடவே கருப்பின மக்களுக்கு அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆப்ரகாம் லிங்கனின் பைபிள் மீதும் ஆணையாக பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார் ஒபாமா.



கனவு பலித்தது நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அடிமையாக இருந்த இனத்தின் ஒருவர் அந்த நாட்டையே ஆள முடிவது அமெரிக்காவின் சுதந்திரத்தில் முக்கியத்தும் வாய்ந்ததுதான். ஏனென்றால், மக்கள் தொகை அடிப்படையில் கருப்பின மக்கள் இன்னும் சிறுபான்மையினரே. பெரும்பான்மை வெள்ளை இன மக்களின் ஆதரவு இல்லாமல் ஒபாமாவின் வெற்றி சாத்தியமில்லை. அவரது வெற்றி மூலம், மார்ட்டின் லூதர் கிங்கின் 'நிறத்தால் அல்லாமல் நடத்ததையால் மதீப்பீடு செய்யப்பட வேண்டும்' என்ற கனவு முழுமையாக நிறைவேறியதாகவே கருதலாம்.





.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: