சென்னை: நான் நினைத்திருந்தால் விஸ்வரூபம் படத்தை தமிழக அரசின் சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1995ன் கீழ் நிரந்தரமாக தடை செய்திருக்க முடியும். ஆனால் எனக்கு எந்தவிதமான பகைமை உணர்வும் இல்லை என்பதால்தான் சிஆர்பிசி 144 சட்டத்தின் கீழ் தடை செய்தேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு திரைப்படத்தைத் தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தமிழ்நாடு சினிமா முறைப்படுத்தும் சட்டம் 1955 என்று ஒன்று உள்ளது. அச்சட்டத்தின் 7வது பிரிவி்ன் கீழ் மாநில அரசுக்கு ஒரு திரைப்படத்தைத் தடை செய்யும் முழு அதிகாரமும் உள்ளது. அந்த சட்டப் பிரிவின் கீழ்தான் டேம் 999 படம் தடை செய்யப்பட்டது. அதை உச்சநீதிமன்றமும் சமீபத்தில் உறுதி செய்தது.
எனது அரசு நினைத்திருந்தால், நான் நினைத்திருந்தால், விஸ்வரூபம் படத்தை நான் நேரடியாக அந்த சட்டப் பிரிவின் கீழ் தடை செய்திருக்க முடியும். நான் அதை செய்யவில்லை. சிஆர்பிசி 144 சட்டப் பிரிவின் கீழ்தான் தடை செய்தேன்.அதுவும் கூட 15 நாட்களுக்குத்தான்.
இதன் மூலம் நான் எந்தவிதமான உள்நோக்கத்துடன் நான் செயல்படவில்லை என்பதை உணர முடியும். இந்தப் படத்துக்கு எதிராக அரசியல் ரீதியாக நானோ, எனது அரசோ செயல்படவில்லை என்பதையும் உணர முடியும் என்றார் ஜெயலலிதா.