மதுரை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் ஒருவர் பலியாகி உள்ளனர். 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் 67 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமங்கள்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக விலங்குகல் நல ஆர்வலர்கள் என்ற பெயரில் இப்போட்டிகளை நடத்த பெரும் நெருக்கடி ஏற்பட்டது. தற்போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் திருநாளின் முதல் நாளில் மதுரை அவனியாபுரத்திலும் மறுநாள் பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. நேற்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் நேற்று காலை 8 மணிக்கு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு காளைகள் அனைத்தும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 473 காளைகள் வந்திருந்த நிலையில் 22 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. காளைகளை அடக்குவதற்காக 480 பேர் முன்வந்தபோதும் 361 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கும் வீரர்கள் வாடிவாசல் அருகே மறைந்து நின்றனர். காளைகள் வெளிவந்ததும் அவற்றின் திமிலைப் பிடித்தபடி எல்லைக் கோடு வரை சென்றனர். இந்த வீரர்களுக்கு மட்டும் பரிசுகள் அளிக்கப்பட்டன. அவனியாபுரம் சிந்து காளை, அச்சம்பத்து, சாமியார்பட்டி, ஆதனூர் காளைகள் சீற்றத்துடன் மாடுபிடி வீரர்களை விரட்டின. இவற்றை அடக்க இளைஞர்கள் பெரும் சிரமப்பட்டனர்.
மாடுபிடி வீரர்களாக போலீசார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்களாக பல போலீசாரும் கலந்து கொண்டிருந்தனர். பரிசுகளைப் பெற்ற அவர்கள், கேலரிகளில் அமர்ந்திருந்த காவல்துறை உயர் அதிகாரிகளைப் பார்த்து சல்யூட் அடித்தபடியே மாடுகளைப் பிடிக்க பாய்ந்தனர். மாடுபிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள், நினைவுக் கேடயம், சில்வர் அண்டா வெள்ளிக் கொலுசு, வெள்ளி காசு உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.
காயமடைந்தவர்கள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மொத்தல் 38 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் இருவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்க வழக்கம் போல வெளிநாட்டினரும் பெருமளவில் குவிந்திருந்தனர். இவர்களில் பலர் ஆண்டுதோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வருகைதரக்கூடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் காளை முட்டியதில் ஒருவர் பலியானார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 29 பேர் படுகாயமடைந்தனர்.