விஸ்வரூபம் படத்துக்கு 2 வாரம் தடை- 144 தடை உத்தரவு பிறப்பிப்பு - கமல் அதிர்ச்சி

சென்னை: கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களு் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குமுறல் வெளியிட்டுள்ளனர். திருக்குரானை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

விஸ்வரூபம் படத்தை மிலாது நபி தினமான நாளை கமல்ஹாசன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார்.இதுதான் இஸ்லாமியர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கி விட்டது.  

இதையடுத்து அவசர கூட்டத்துக்கு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. படத்தை வெளியிட விடாமல் தடுப்போம் என்றும் இவை சூளுரைத்தன.

இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு கமிஷனர் ஜார்ஜ் இல்லை. இதையடுத்து சில உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கிளம்பிச் சென்றார்.

இந்த நிலையில்தான் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபாலுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் கோவை மாவட்டம் பதட்டமான பகுதியாகும்.இங்கு தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் விஸ்வரூபம் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும். எனவே அப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
அதேபோல பல்வேறு மாவட்ட எஸ்.பிக்களும் படத்தைத் திரையிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று உள்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நேற்று உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அதிரடியாக படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் போராட்டங்கள், பிரச்சினைகள் வெடிப்பதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை தேவைப்படும் இடங்களில் பிறப்பிக்கவும் அவர் மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.

.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: