நிலம் புயல் நேற்று மாலை கரையைக் கடந்தது. ஆனால் நேற்று முன்தினம் இரவு முதலே சென்னை உள்ளிட்ட கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கன மழையும் பெய்யத் தொடங்கி விட்டது.
நாகப்பட்டனம், திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெரிதாக இல்லை, ஆனால் காற்றுதான் பெருமளவில் பயமுறுத்தி விட்டது.
பேய் போல ஆடிய மரங்களைப் பார்த்து மக்கள் பெரும் பீதியடைந்தனர். தானே புயல் வந்தபோது கூட இப்படித்தான் பெரிய அளவில் மழை இல்லை, ஆனால் காற்று மிகப் பலமாக வீசியது. இதனால்தான் கடலூர் மாவட்டம் மிகப் பெரிய சேதத்தை சந்திக்க நேர்ந்தது. எனவே அதுபோல இப்போதும் நேருமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்தது.
பலத்த காற்று காரணமாக மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார விநியோகத்தை மின்வாரியம் துண்டித்து விட்டது. இதனால் நேற்று காலை 9 மணி முதலே நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. போகப் போக புறநகர்ப் பகுதிகளிலும் மின்சாரத்தை நிறுத்தி விட்டனர். இதனால் ஒட்டுமொத்த சென்னையும் இருளில் மூழ்கியது.
எங்கு பார்த்தாலும் கரண்ட் இல்லை என்பதே பேச்சாக இருந்தது. காலையில் போன மின்சாரம், பல பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் கொடுக்கப்பட்டது. சில பகுதிகளில் அதற்கு மேலும் போனது. சில புறநகர்ப் பகுதிகளில் காலை வரையிலும் கூட மின்சாரம் வரவில்லை.
சென்னை தவிர, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. புயல் கடந்து போய் சில மணி நேரம் கழிந்த பின்னரே மீண்டும் மின் விநியோகம் தொடங்கியது.
மின்விநியோகத்தை முன்னெச்சரிக்கை காரணமாகவே நிறுத்தினோம் என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.