திருவனந்தபுரம்: கேரளாவில் 13 வயது சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பமாக்கிய 39 வயது கொடூர வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொந்தரவு மூலம் கர்ப்பிணியான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டாரா பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக, திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.டி மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் நடைபெற்ற பிரசவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு அழகான குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பெற்று கொள்ளும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் இல்லாததால், தாய் மற்றும் சேய் உடல்நிலை மோசமானது. இதையடுத்து சிறுமியின் நிலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமி மற்றும் அவரது தாய், சகோதரன் ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான நபர் மீது புகார் அளிக்க 3 பேரும் முன் வரவில்லை. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் சிறுமியின் வீட்டில் சிபு(39) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளது தெரியவந்தது. சிறுமியின் தாய்க்கு, சிபு 2வது கணவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த சில மாதங்களாக சிபு, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
துவக்கத்தில் சிறுமியின் தாய்க்கு தெரியாமல் சிபு, சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன்பிறகு குடும்பத்தினரை மிரட்டி, தாயின் கண்ணுக்கு முன்பாகவே, சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து வெளியே தகவல் தெரிவித்தால் சிறுமியையும், அவரது தாய், சகோதரன் ஆகியோரை கொலை செய்துவிடுவதாக சிபு மிரட்டியதாக தெரிகிறது. இதில் பயந்து போன சிறுமியின் குடும்பத்தினர், இது குறித்து வெளியே தெரிவிக்க பயந்துள்ளனர்.
இதையடுத்து சிபுவை கைது செய்த போலீசார், கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் சிறுமி மற்றும் குழந்தையின் நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.