சென்னை : நிலம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. மழை காரணமாக கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னைக்கு மிக அருகே தென்பகுதியில் நிலம் புயல் கரையைக் கடக்கும் என்பதால் சென்னை மாநகரம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடும். வழக்கம்போல இன்றி இம்முறை கனமழை இல்லாமல் பலத்த காற்று வீசி வருகிறது. கனமழை பெய்தால் காற்றின் வேகம் குறைந்திருக்கும். ஆனால் பலத்த காற்று வீசிவருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சென்னை மெரினா கடற்கரை பெரும் சேதத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.
புயலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மின்தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தி குடிநீர் விநியோகம் செய்யவும் அவர் உத்தரவிட்டார். புயல் கரையைக் கடந்தாலும் கடலோர மாவட்டங்களில் மழையும், காற்றும் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.