மதுரை இளைய ஆதீனம் பதவியிலிருந்து நித்யானந்தா நீக்கம்: அருணகிரிநாதர் அதிரடி!

 Madurai Mutt Head Adeenam Removes மதுரை: மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
1,500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீன மடம் சைவ சமயக்குரவர் என்று அழைக்கப்படும் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது. இதன் 292வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வருகிறார்.
இந்த மடத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோவில், திருப்புறம்பியம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிடுதி அருகே ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தாவை, அதுவும் அவர் ரஞ்சிதா மேட்டரில் சிக்கி சீரழிந்த நிலையில், கடந்த ஏப்ரல் 23ம் தேதி இளைய நியமித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் அருணகிரிநாதர்.
அந்த நேரத்தில் நித்யானந்தாவிடம் இருந்து சில கோடிகளும் அருணகிரிநாதர் கைக்கு மாறியதாக புகார்கள் எழுந்தன.
நித்யானந்தாவின் நியமனத்துக்கு உண்மையான பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. மதுரை ஆதீனத்தை அருணகிரி அண்ட் நித்தி கோவிடம் இருந்து மீட்க ஆதீன மீட்புக் குழு உருவாக்கப்பட்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
காஞ்சி மடம் மற்றும் திருவாவடுதுறை ஆதீன மடம் உள்ளிட்ட அனைத்து சைவ மடங்களும் நித்யானந்தரின் நியமனத்தை எதிர்த்தன. ஆனாலும், நித்யானந்தாவை நீக்க முடியாது என்று மதுரை ஆதீனம் கூறி வந்தார்.
இந் நிலையில் ஆதீனத்தில் அருணகிரிநாதரின் அதிகாரங்களை நித்தி அண்ட் கோ ஒவ்வொன்றாக பறித்தார். மேலும் ஆதீன மடத்தில் பெண்களின் நடமாட்டமும் அதிகரித்தது. ரஞ்சிதாவும் கூட வந்து போக ஆரம்பித்தார்.
அதே நேரத்தில் ஆதீனம்-நித்யானந்தா முட்டல் மோதல் செய்திகளும் வெளி வந்தவண்ணம் இருந்தன.
இதையடுத்து ஆதீன மீட்புக் குழுவினர் நித்யானந்தா நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந் நிலையில் நித்யானந்தாவுக்கு எதிரான நிலையை தமிழக அரசு எடுத்தது. அப்போது தான் அருணகிரியும் நிதியானந்தாவும் உண்மையிலேயே அச்சத்தில் ஆழ்ந்தனர். மதுரை ஆதீனத்தின் சொத்துகள் இந்து சமய அறநிலையத் துறையின் சட்ட விதிகளை மீறிப் பயன்படுத்தப்படுவதாகவும், அங்கு புலித்தோல் உள்ளிட்டவை இருப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆதீனத்துக்குள் ரெய்டே நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை ஆதீனம் மீதான உயர் நீதிமன்ற வழக்கில், அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நித்யானந்தா ஒரு ஒழுக்கம் கெட்ட மனிதர் என்றும் அவரது நியமனம் செல்லாது என்றும் கூறப்பட்டிருந்தது.
மேலும் நேற்று முன்தினம் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் தனபால், தாக்கல் செய்த மனுவில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மடாதிபதியாக தொடர்ந்து நீடிக்கத் தகுதியற்றவர் ஆகிறார். எனவே அவர் மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். அடுத்த மடாதிபதி நியமிக்கப்படும் வரை மதுரை ஆதீன மடத்தை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதில் மதுரை ஆதீன தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளித்து வழக்கை 29-ந் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்தது.
இதன்மூலம் மடத்திலிருந்து நித்யானந்தா வெளியே போகாவிட்டால் மடத்தை அரசே கையகப்படுத்தும் என்பதை நித்தியும் அருணகிரியும் உணர்ந்து கொண்டனர்.
இந் நிலையில், மதுரை பத்திரிகையாளர்கள் சிலரை கடந்த வாரம் தொடர்பு கொண்ட மதுரை ஆதீனம், இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நித்யானந்தா இளைய சன்னிதானம் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும், அதை அவரே அறிவிப்பார் என்றார்.
அதே போல திருவண்ணாமலையில் இருந்த நித்யானந்தாவும் தான் விலகப் போவதாக சீடர்கள் மூலம் கூறி வந்தாலும், விலகும் முடிவை எடுக்காமல் தாமதம் செய்து வந்தார்.
இந் நிலையில் மதுரை மாநகரக் காவல்துறை ஆணையருக்கு மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது வழக்கறிஞர் மூலம் நேற்று மாலை ஒரு புகார் மனுவைக் கொடுத்து அனுப்பினார்.
அதில், மதுரை ஆதீனத்தின் வாரிசாக என்னால் நியமிக்கப்பட்ட பெங்களூர் பிடுதி ஆசிரம நிறுவனர் ஸ்ரீநித்யானந்தாவை, 19.10.2012-ல் வாரிசு பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடுகின்றோம். மதுரை ஆதீனத்தின் நலன் கருதி, யாருடைய தூண்டுதலோ வற்புறுத்தலோ இன்றி இந்த உத்தரவை பிறப்பிக்கின்றோம் என்று கூறியுள்ளார் அருணகிரிநாதர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: