மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு?

 Nithyananada Step Down From Madurai Adheenam மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை.
ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார்.
இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்கு எதிரான நிலையை எடுத்துள்ளது. இதுவரை எதற்கும் பயப்படாமல் இருந்த நித்யானந்தா, தமிழக அரசு நீதிமன்றத்தில் தன்னைப் பற்றி எடுத்து வைத்து வரும் கருத்துக்களைக் கண்டு ஆடிப் போயுள்ளதாகத் தெரிகிறது.
நித்யானந்தா ஒரு நடத்தை கெட்ட பேர்வழி என்று சமீபத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் மதுரை ஆதீனத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கடுப்பாகியுள்ள அரசு, ஆதீன மடத்துக்கு விரைவில் ஒரு செயல் அலுவலரை நியமிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நித்யானந்தாவை விரட்டி விடா விட்டால் மடம் தனது கட்டுப்பாட்டில் இருந்து போய்விடும் என்ற பீதியில் அருணகிரிநாதர் உள்ளார்.
இந்த அச்சத்தை அவர் நித்யானந்தா தரப்புக்கும் தெரிவித்துவிட்டதோடு, இடத்தைக் காலி செய்யவும் சொல்லி கதறி வருவதாகத் தெரிகிறது.
இதையடுத்து இப்போது திருவண்ணாமலையில் தங்கியுள்ள நித்தியானந்தா தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து வருவதாகவும், மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பொறுப்பில் இருந்து விலகிவிட அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று மாலை அவர் தனது முடிவை அறிவிக்கலாம் என்கிறார்கள்.
இளைய ஆதீனமாகத் தொடர்ந்தால் தமிழக அரசின் நடவடிக்கை தன் மீதும் பாயும் என்ற பயமும் நித்யானந்தாவை ஆட்டுவித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், மதுரை ஆதீனத்துக்கு தன்னால் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் (அடடடா), தான் பதவி விலகும் இந்த முடிவை அவர் எடுக்க உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: