
குறிக்கப்பட்ட
ஒரு நாளை நோக்கிய பயணத்தில்
காலத்தின் சுமையில்
கனம் கூடிப் போவதும்
இருப்பது போலவும்
கிடைக்காமல் போகாதெனவும்
இல்லாமல் இருக்காதெனவும்
கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில்
காலத்தின் இருப்பில்
கவனம் கூடிப் போவதுவும்
இதுவும்
கடந்து போகுமென
இதயம்
கிடந்து துடித்தாலும்
காலத்தின் கடப்பில்
பிடி நழுவிப் போவதுவும்
இதோ
இந்த நொடியில்
தீர்ந்துவிடப் போகிறது
அடுத்தது நாம்தான்
என்கிற
அனுமானங்கள்
அடுத்தடுத்த நிமிடங்களில்
சுமையேற்றி வதைப்பதுவும்
என
நிகழ்காலம்
நிழல்போலத் தெளிவின்றிப் போனதால்
சுவாசிக்கக்கூட
பிரயாசைப் பட வேண்டியிருக்கும்
எந்த
உபகரணம் கொண்டும்
இயல்பு
மாற்றிவிட வியலாதது
காத்திருப்பும் கணங்களும்!
-சபீர் அபுஷாருக்
நன்றி.... திண்ணை.