நிலம் புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருக்கிறது-வானிலை மையம்

 Nilam Moves Closer Chennai Coast சென்னை: நிலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாகவும், மேலும் கரையை புயல் முழுவதுமாக கடந்து முடியும் இன்னும் 2 மணிநேரமாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் சென்னைக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் உருவெடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதற்கு நிலம் என்றும் பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகள் கடற்பரப்பில் உருவான இந்த புயல் இலங்கையின் திரிகோணமலைக்கும் சென்னைக்கும் இடையே மையம் கொண்டிருந்தது.
நேற்று இரவு முதல் இது வேகமாக நகர்ந்து இன்று காலை சென்னைக்கு தென்கிழக்கில் 320 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது இது சென்னைக்கு தென்கிழக்கில் வந்து புயல், தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தற்போது வீசி வரும் பலத்த காற்று காரணமாக, பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி உள்ளது.
சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் ரோந்து சென்று வருகின்றனர். மேலும் உடனடி மருத்துவ உதவிக்காக ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிலம் புயல் கரையை முழுவதுமாக கடந்து முடிக்க 2 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 5 மணிநேரத்திற்கு பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8-ம் எண் புயல் கூண்டு
சென்னை மெரினா கடற்கரையின் மணற்பரப்பு முழுவதையும் சீறிவரும் கடலலைகள் ஆக்கிரமித்திருக்கிறது. சென்னை துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னை துறைமுகத்துக்கு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதால் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 6-ன் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பலத்த காற்று
இன்று மாலைக்குள் புதுச்சேரி- நெல்லூர் இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்க இருக்கிறது, புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நிலம் புயல் கரையை நெருங்க நெருங்க கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி மிரட்டி வருகின்றன. இதனால் இன்றும் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என்று ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
அலுவலகங்கள் விடுமுறை:
புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த சேதங்கள் ஏற்படலாம் என்பதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களை மாலை விரைவில் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
மின்சாரம் துண்டிப்பு
நிலம் புயலால் சென்னை நகரின் பல பகுதிகளில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் உஷாரான நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே தமிழகம் முழுவதும் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: