உலக பாரம்பரிய சின்னமாகும் செட்டிநாடு பங்களா, பழவேற்காடு ஏரி, புனித ஜார்ஜ் கோட்டை!

கும்பகோணம்: உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் புனித ஜார்ஜ் கோட்டை, பழவேற்காடு ஏரி, செட்டிநாடு பங்களாக்கள், கழுகுமலைப் பாறைச் சிற்பங்கள், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவை தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் குமாரி ஷெல்ஜா கூறியுள்ளார்.

அட்டகாசமான செட்டிநாடு வீடுகள்

நாட்டுக்கோட்டை செட்டியார் சமுதாயத்தினர் தமிழ்ச் சமுதாயத்திற்கு அளித்த அருமையான பொக்கிஷம்தான் செட்டிநாடு வீடுகள். முற்றிலும் பர்மா தேக்கால் பார்த்துப் பார்த்து இழைத்து கட்டப்பட்ட அருமையான கலைப் பொக்கிஷங்கள் ஆகும். கடந்த காலத்தின் பாரம்பரியத்தை மெளனமாக இன்றளவும் நமக்கு சொல்லியபடி உள்ளன இந்த அரண்மனை வீடுகள்.


முதல் இங்கிலீஷ் கோட்டை - புனித ஜார்ஜ் கோட்டை


இந்தியாவின் முதல் ஆங்கிலேய கோட்டை என்ற பெருமை கொண்டது புனித ஜார்ஜ் கோட்டை. 1644ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோட்டைதான் இன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் தன்னகத்தே கொண்டு கம்பீரமாக நிற்கிறது.


பழவேற்காடு ஏரி


இந்தியாவின் 2வது மிகப் பெரிய முகத்துவாரம்தான் இந்த பழவேற்காடு ஏரி. புலிகாட் ஏரி என்று இதற்கு ஆங்கிலத்தில் பெயர். இங்கு அழகான பறவைகள் சரணாலயமும் உள்ளது. அருமையான சுற்றுலாத்தலமும் கூட.


கழுகுமலை ஜைன மத சிற்பங்கள்..


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஜைன மதம் செழித்தோங்கி வளர்ந்திருந்தது. அப்போது ஏராளமான ஜைன மதக் கோவில்களும், பாறைகளைக் குடைந்து சிற்பங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை அழிந்துவிட்டாலும் சில இன்னும் காலத்தைக் கடந்து நிற்கின்றன. அதில் ஒன்று கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் உள்ள வேட்டுவன்கோவில். 8ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த கோவிலும் அதைச் சார்ந்த சிற்பங்களும் அந்த கால குடைவரை சிற்பங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.


ஸ்ரீரங்கத்து 'திராவிட'ப் பெருமாள்!


முற்றிலும் திராவிடக் கட்டடக் கலையைப் பின்பற்றிக் கட்டப்பட்ட வைணவ திருத்தலம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். பள்ளி கொணட் நிலையில் எம்பெருமாள் இங்கு காட்சி தருகிறார். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. திவ்வியப் பிரபந்ததில் இந்தக் கோவிலைப் பற்றி புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிக மிகப் பழமையானது, செழுமையானது ரங்கநாதர் கோவில்.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: