
வாஷிங்டன்: இந்திய ராணுவத்தின் முன்னாள் அதிகாரி அமெரிக்காவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
1990-களில் இந்திய ராணுவத்தில் மேஜராக பதவி வகித்தவர் அவ்தார் சிங். ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 1996-ம் ஆண்டு மனித உரிமைகள் வழக்குகளில் ஆஜராகி வந்த வழக்கறிஞர் ஜலீல் அந்தர்பியை அவ்தார் சிங் சுட்டுக் கொன்றதாக புகார் ஒன்றும் நிலுவையில் உள்ளது. பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினார் அவ்தார் சிங்.
இந்நிலையில் தமது இல்லத்திலிருந்து அருகில் உள்ள போலீசாருக்கு அதிகாலை 6.15 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவ்தார்சிங், தாம் தமது குடும்பத்தினரை கொன்றுவிட்டதாகவும் தாமும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். இத்தகவல் உடனே உள்ளூர் நிர்வாகத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. உள்ளூர் நிர்வாகத்தினர் அவ்தார் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாத நிலையில் அவரது வீட்டுக்கு காவல்துறையினர் உதவியுடன் நேரில் சென்றுள்ளனர்.
அங்கு அவ்தார்சிங் , அவரது மனைவி, குழந்தைகள் ஆகியோர் சடலமாக கிடந்துள்ளனர். அங்கு படுகாயமடைந்த நிலையில் இருந்த மற்றொரு இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவ்தார்சிங் தமது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.