மும்பை: பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்பை தூக்கிலிட, அதற்கென பிரத்யேகமாக உள்ள தூக்கிலிடும் நபரை நாடாமல், ஒரு போலீஸ்காரரை விட்டு தூக்கில் போட மும்பை ஆர்தர் சாலை சிறைச்சாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமாக தூக்குத் தண்டனைக் கைதிளை தூக்கிலிடும்போது அதற்கென உள்ள நபர்களைத் தேடிப் பிடித்து கூட்டிக் கொண்டு வந்து தூக்கிலிடுவதுதான் வழக்கம். ஆனால் கசாப் விவகாரத்தில் போலீஸாரே அவனை தூக்கிலிடுவார்கல் என்று சிறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீஸாரின் கையாலேயே கசாப் தூக்குக் கயிற்றை சந்திக்கவுள்ளன்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சிறைத்துறை டிஐஜி ஸ்வாதி சாத்தே கூறுகையில், மரண தண்டனையை நிறைவேற்ற தனியாக ஒரு ஆள் இருப்பார். அவர்தான் தூக்குக் கயிற்றை மாட்டி தூக்கிலிடுவார் என்ற கருத்து உள்ளது. ஆனால் இது தவறானது. அப்படியெல்லாம் சினிமாவில் மட்டுமே காட்டுவார்கள். நிஜத்தில் அப்படி இல்லை.
கான்ஸ்டபிள் அல்லது சிப்பாய் அந்தஸ்திலான போலீஸார்தான் தூக்குத் தண்டனைக் கைதியின் கழுத்தில் கயிற்றை மாட்டி முகத்தை மூடுவார்கள். சிறை உயர் அதிகாரிதான் லீவரை இழுத்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவார். இதுதான் வழக்கமாகும்.
என்னை இதுபோல செய்யுமாறு கூறினால் நான் அதைத் தட்ட மாட்டேன். குறிப்பாக கசாப்பை தூக்கிலிடும் வேலையை எனக்குக் கொடுத்தால் உடனே அதை ஏற்பேன் என்றார் ஸ்வாதி சாத்தே.
சாத்தே முன்பு ஆர்தர் சாலை சிறைச்சாலையில்தான் ஜெயிலராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான் தற்போது கசாப் அடைக்கப்பட்டுள்ளான்.
மகாராஷ்டிராவில் கடைசியாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அலிபாக் என்ற ஊரைச் சேர்ந்த சுதாகர் ஜோஷி என்பவர் தூக்கிலிடப்பட்டார். 1995ம் ஆண்டு இது நடந்தது. 3 கொலைகளைக் செய்த வழக்கில் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதேபோல முன்னாள் ராணுவத் தலைமைத் தளபதி ஆர்.கே.வைத்யா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சுக்தேவ் சிங் சுகா மற்றும் ஹர்ஜீந்தர் சிங் ஜிண்டா ஆகியோருக்கு 1992ம் ஆண்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தூக்குத் தண்டனையை பொதுவாக புனேவில் உள்ள எரவாடா சிறை மற்றும் நாக்பூர் மத்திய சிறையில்தான் நிறைவேற்றுவார்கள். எனவே கசாப்பை எங்கு தூக்கிலிடுவார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பாகிஸ்தான் தீவிரவாதிகளில் உயிருடன் பிடிபட்ட ஒரே நபர் கசாப் மட்டுமே. அவனைப் பிடிக்க உதவியவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம் ஆவார். இந்தப் போராட்டத்தில் அவர் வீரமரணம் அடைந்தார் என்பது நினைவிருக்கலாம்.