கசாப்புக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்-அப்பீல் மனு டிஸ்மிஸ்

 Death Sentence Ajmal Kasab Sc Decide Today டெல்லி: மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் வழக்கில் தனக்கு மும்பை தனி நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான தீர்ப்பை இன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. கசாப்பின் அப்பீல் மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம் அவனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானிலிருந்து மும்பைக்குள் கடல் மார்க்கமாக இரவில் புகுந்த தீவிரவாதிகள் பத்து பேர் வெறியாட்டம் ஆடித் தீர்த்தனர். 3 நாட்கள் நடந்த இந்த பயங்கர தீவிரவாத தாக்குதலால் இந்தியாவே அதிர்ந்து நின்றது. உலக நாடுகள் இந்த பயங்கர தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை டிவிகளில் நேரடியாகப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன.
கசாப்பை உயிருடன் பிடித்த எஸ்.ஐ. துக்காராம்
3 நாள் நடந்த வெளியாட்டத்தில் 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனைப் பிடித்தவர் சப் இன்ஸ்பெக்டர் துக்காராம். மிகவும் தீரத்துடன் செயல்பட்டு கசாப்பைப் பிடித்த அவர் தீவிரவாதிகளில் தாக்குதலில் சிக்கி வீரமரணம் அடைந்தார்.
வரலாறு காணாத இந்த தீவிரவாதத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் கசாப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இதில் 2010ம் ஆண்டு மே 6ம் தேதி மும்பை தனி நீதிமன்றம் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை பின்னர் பாம்பே உயர்நீதிமன்றம் 2011, அக்டோபர் 10ம் தேதி உறுதி செய்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தான் கசாப். அதில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைத்து ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரியிருந்தான்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்தது உச்சநீதிமன்றம். முன்னதாக கசாப்புக்காக வாதாட உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அமைக்கல் கியூரியான ராஜு ராமச்சந்திரன் உச்சநீதி்மன்றத்தில்நடந்த வாதத்தின்போது கூறுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர்தான்மும்பையில் நடந்த தாக்குதல். ஆனால் அந்த மாபெரும் சதித் திட்டத்தை உருவாக்கிய குழுவில் கசாப் இடம் பெறவில்லை. அதில் அவன் ஒரு அங்கமாக இல்லை என்று கூறியிருந்தார்.
ஆனால் மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் ஆஜரான கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போரில் முக்கியப் பங்காற்றியுள்ளான் கசாப். எனவே அவனை தூக்கில் தொங்க விடுவதே சரியானதாக இருக்க முடியும் என்று வாதிட்டிருந்தார்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பை அளித்த உசத்சநீதிமன்றம், கசாப்பின் மேல் முறையீட்டு மனுவை டிஸ்மிஸ் செய்து, அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளையும் உறுதி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அவனைத் தூக்கிலிட நாள் குறிக்கப்படும். இருப்பினும் கசாப் சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை கோரி மனு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கருணை மனு மீது முடிவு வர வருடக்கணக்கில் ஆகும் என்பதால் கசாப் இப்போதைக்கு தூக்கிலிடப்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவே.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: