ஒலிம்பிக்கில் மகளிர் 400 மீற்றர் மெட்லி நீச்சல் பிரிவில் 16 வயதேயான சீனாவின் யே ஷிவான் தங்கப் பதக்கம் வென்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதைப் பார்த்து அமெரிக்கா கூட ஊக்க மருந்து புகாரை எழுப்பியுள்ளது.கடந்த சில ஓலிம்பிக் போட்டிகளாக சீனா அதிக பதக்கங்களை குவித்து வருகிறது. தற்போதைய லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் சீனாவே தங்கம் உட்பட அதிகப்பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆனால் ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவதற்காக சீனாவில் சிறார்களை எந்த அளவுக்கு சித்ரவதை செய்து பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது குறித்த ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
சிறுவர், சிறுமியரின் கைகளை முறுக்கியும், கால்களை இழுத்துப் பிடித்து வளைத்தும், உடல்களை போட்டு நொறுக்கி அள்ளியும் மிகக் கொடூரமாக பயிற்சியளிக்கிறார்கள்.
சீனாவில் இந்த வயதிலேயே இப்படிக் கடுமையாக பயிற்றுவித்தால்தான், எதிர்காலத்தில் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால் இப்படி சித்ரவதைப் பயிற்சியளிக்கிறார்கள்.
முன்பு கிழக்கு ஜேர்மனியில்தான் இப்படி சித்ரவதைக் கூடங்கள் போன்ற பயிற்சிக் கூடங்களில் வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சிறு வயதிலேயே மிகக் கடுமையான முறையில் பயிற்சி அளித்து உருவாக்கி வந்தனர்.
மிகவும் சிறிய வயதிலேயே ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்து விடுவார்களாம். அங்கு அவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சி தரப்படுகிறது. கைகளை வளைப்பது, கால்களை வளைப்பது, உடலை முறுக்குவது என பயிற்சி தரப்படுகிறது.
இதற்காக, கை, கால்களை பயிற்சியாளர்கள் வளைக்கும்போது அந்தக் குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. சரியாகச் செய்யாமல் அழும் குழந்தைகளுக்குப் பயிற்சியாளர்கள் சரமாரியாக அடிக்கிறார்கள்.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த சித்ரவதைப் பயிற்சி முகாம்கள் குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீனக் குழந்தைகளை ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளுக்குத் தயார் படுத்த எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற விவரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது.
மேலும், இதுபோன்ற பள்ளி ஒன்றில்தான் தற்போது தங்கம் வென்று சர்ச்சைக்குள்ளாகியுள்ள யே ஷிவானும் நீச்சல் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







