'லைட்' போடாமல் இருந்தால் பற்றாக்குறையை சமாளிக்கலாம்... மின்வாரியத்தின் பலே யோசனை!

சென்னை: மாலை நேரங்களில் ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் மின்சாரத்தை சேமிக்கும் வகையில், விளம்பரப் பலகைகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளைப் பொருத்தாமல் இருக்க முன்வர வேண்டும். இதன் மூலம் மின்சாரப் பற்றாக்குறையை குறைத்து மின்விநியோகத்தை சீரமைக்க முடியும் என்று தமிழ்நாடுமின்சார வாரியம் கூறியுள்ளது.
மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஸ்டார் ஹோட்ல்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மின்வாரியமான, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது மின்சார உற்பத்திக்கும், மின்சார தேவைக்கும் இடையே 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை இருக்கிறது. அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் தேவைக்கேற்றவாறு அறிவிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக மின்சார வெட்டு அமல்படுத்தவேண்டியுள்ளது.
இந்நிலையை ஓரளவுக்கு சரிசெய்வதற்கு அனைத்து தரப்பு மின்நுகர்வோர்களின் உதவியும் தேவைப்படுகிறது.
அனைத்து நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்கள்(ஸ்டார் ஓட்டல்) அவர்களது பங்களிப்பாக அக்டோபர் மாத இறுதி வரை மாலை 6 மணி முதல் தங்களது சொந்த ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்தேவையை நிறைவு செய்துகொள்வதோடு அறை குளிர்விப்பான்களின் வெப்பநிலையை சீராக 26 டிகிரியில் நிலை நிறுத்தி, உபயோகித்து மின்சார சேமிப்பு செய்ய தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு சேமிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அடிப்படைதேவைக்கான மின்சாரத்தை விநியோகம் செய்ய ஏதுவாக இருக்கும் எனத்தெரிவித்து கொண்டு இந்நிலையில் தகுந்த ஒத்துழைப்பு அளிக்கும்படி வேண்டப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழத்தில் தற்போது சென்னையில் மட்டுமே மிகக் குறைந்த அளவிலான மின்தடை உள்ளது. அதாவது அதிகாரப்பூர்வமாக 1 மணி நேரம் கரண்ட் கட் செய்யப்படுகிறது. இருப்பினும் பல பகுதிகளில் இதையும் தாண்டி கரண்ட்டை அவ்வப்போது பிடுங்கி விடுவதாக மக்கள் சொல்கிறார்கள்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் குறைந்தது 12 மணி நேரம் முதல் அதிகபட்சம் 16 மணி நேரம் வரை மின்சாரம் இல்லை என்று மக்கள் குமுறுகிறார்கள். இதனால் அன்றாடப் பணிகளான மிக்ஸி, கிரைண்டர்களை இயக்க முடியவில்லை. பிரிட்ஜ் ரிப்பேராகி விடுகிறது. மின்விசிறிகளை இயக்க முடியவில்லை. இதனால் தினசரி வாழ்க்கை கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போயுள்ளது.
என்ன செய்வது, எங்கு போய் முட்டிக் கொள்வது என்று தெரியாமல் தமிழக மக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் குமுறலில் உள்ளனர்.
மாணவர்கள் படிக்க முடியவில்லை. தொழில் நிறுவனங்கள் வேலை செய்ய முடியில்லை. இரவில் கொசுக்கடியுடன் மின்தடையும் சேர்ந்து மக்களை கொன்று வருகிறது.
இந்த பிரச்சினை குறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
ஒரு பக்கம் காற்றாலை மின்சாரம் கைகொடுக்கவில்லை. இன்னொரு பக்கம் மின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடைவெளி அதிகரித்தபடி உள்ளது. இதனால்தான் வேறு வழியில்லாமல் மின் வெட்டை பல மணி நேரம் அதிகரிக்க வேண்டி உள்ளது.
சென்னையில் சாதாரண கடைகளில் கூட இப்போது ஏராளமான அலங்கார விளக்குகள் போடப்படுகின்றன. இதனால் அதிக அளவில் மின்சாரத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். மாலை நேரங்களில் இந்த அலங்கார லைட்டுகளைப் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே இப்படிப்பட்டவர்கள் சற்று ஒத்துழைப்பு கொடுத்தால் பற்றாக்குறையை சற்று கணிசமான அளவில் குறைத்து விநியோகத்தை அதிகரிக்க முடியும் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: