இஸ்லாமாபாத்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்கர் எடுத்த திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் பாகிஸ்தான் நாட்டை உலுக்கியுள்ளது.அமெரிக்காவின் இன்னோஷன்ஸ் ஆப் முஸ்லிம் திரைப்படம் உலகை உலுக்கி வருகிறது. எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் தொடங்கிய போராட்டம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. பாகிஸ்தானில் நேற்று இந்தப் படத்துக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு பிரம்மாண்டமான பேரணிகளையும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்தினர்.
23 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இஸ்லாமியர்கள் நடத்தப்பட்ட பேரணி பெரும் வன்முறையில் முடிவடைந்தது. 2 போலீசார் உட்பட 17 பேர் பலியாகினர். இதேபோல் பாகிஸ்தானின் மற்றொரு நகரமான பெஷாவரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் வன்முறையில் முடிந்தது. பெஷாவர் போராட்டத்தில் வெடித்த வன்முறைக்கு 6 பேர் உயிரிழந்தனர்.
200 பேர் படுகாயம்
இதேபோல் லாகூர், இஸ்லாமாபாத் போன்ற பல இடங்களில் நடைபெற்ற பேரணிகளில் மொத்தம் 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கின்றனர். கராச்சி நகரில் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி குடும்பத்தினருக்கு சொந்தமானதாக இருந்த திரையரங்கம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டு ஊடகங்களும் இந்த பேரணி மற்றும் உயிரிழப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டுள்ளன.