டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள புதிய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் தனது சேவையைத் துவங்கிய முதல் நாளே பழுதானது.ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவிடம் இருந்து அதிநவீன போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை வாங்கியது. கடந்த புதன்கிழமை இந்த விமானம் தனது சேவையைத் துவங்கி டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்தது. பிறகு சென்னையில் இருந்து கிளம்பி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடைந்தது.
அதன் பிற்கு பெங்களூருக்கு கிளம்ப இருந்த நேரத்தில் விமானத்தில் உள்ள குளிரூட்டும் யூனிட் பழுதானது. இதையடுத்து அந்த கோளாறு சரி செய்த பிறகு 40 நிமி்டம் தாமதாக புறப்பட்டுச் சென்றது.
ட்ரீம்லைனரை ஏர் இந்தியா டெலிவரி எடுக்கும் முன்பு அமெரிக்காவில் தற்போது கோளாறு ஏற்பட்ட அதே பகுதி 2 முறை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர ஆக்டுவேட்டர் என்ற எலக்ட்ரிக் பாகத்திலும் கோளாறு ஏற்பட்டு அது மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
எரிபொருள் நிரப்ப வேண்டி இருந்ததால் தான் விமானம் தாமதமாகப் புறப்பட்டது. அதன் கூலிங் யூனிட்டில் கோளாறு ஏற்பட்டது. அந்த பாகம் மாற்றப்பட்டதையடுத்து மீண்டும் எரிபொருள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது என்றார்.
இந்த விமானம் படுத்திருக்கும் ஏர் இந்தியாவை தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் முதல் நாளே மக்கர் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.