மக்கள் மீதான வன்முறையை நிறுத்தே சரணடைகிறோம் -இடிந்தகரை திரும்பிய உதயகுமார் அறிவிப்பு

 Reday Surrender With Conditions திருநெல்வேலி: கூடங்குளத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் இன்று இடிந்தகரை திரும்பினார்.
இடிந்தகரையில் 48 மணி நேர தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பொதுமக்களோடு இணைந்து கொண்ட உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடற்கரையில் ஒன்று திரண்டிருந்த பொதுமக்கள், போலீசாரை தாக்கியதாகக் கூறுவது தவறு. போலீசார்தான் பொதுமக்களைக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் அந்தோணிசாமி கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொதுமக்கள் மீதான வன்முறை தொடரக் கூடாது என்பதற்காக போராட்டக் குழுவின் முன்னனி நிர்வாகிகளாகிய நாங்கள் இன்று இரவு சரணடைகிறோம். கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய இருக்கிறோம்.
அரவிந்த் கெஜ்ரிவால் வருகிறார்:
எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் இடிந்தகரைக்கு வர இருக்கிறார் என்றார் உதயகுமார்.
முன்னதாக தலைமறைவாக இருந்த உதயக்குமார் தான் சரணடைவது குறித்து கூறுகையில்,
நாங்கள் ஆயுதம் எடுத்து போராடுவதாக இருந்தால் 400 நாட்களுக்கு முன்பே அதை செய்திருப்போம். ஆனால் அமைதி வழியில் போராட்டம் நடத்தியோரை கொடுமையாக தாக்கியிருக்கிறது காவல்துறை. கூடுதலாக போலீஸ் படையை திரட்டி வரப்போவதாக மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க.. வன்முறை தொடராமல் இருக்க நாங்கள் போலீசில் சரணடைய தயாராக இருக்கிறோம்.
மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் போராட்டக் குழுவினராகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
வைகோவுடன் வந்து சரணா?:
இந்த நிலையில் உதயக்குமார் கூறும் முக்கிய அரசியல் தலைவர் வைகோ என்று கூறப்படுகிறது. வைகோவை அழைத்துக் கொண்டு அவர் முன்னிலையில் போலீஸில் சரணடைய உதயக்குமார் திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். மேலும், உதயக்குமார் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும்வைகோவை கையாளக் கூடும் என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
அதே போல அணு உலைக்கு எதிராக போராடி வரும் போராட்டக் குழுவின் இன்னொரு தலைவரான புஷ்பராயன் உள்ளிட்டோரும் கூடங்குளம் காவல் நிலையத்தில் இன்று இரவு 8 மணிக்கு நேரில் வந்து கைதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சரண் அறிவிப்பு... இடிந்தகரையில் கிராம மக்கள் ஆலோசனை:
முன்னதாக போலீஸில் சரணடையத் தயார் என்று உதயக்குமார் அறிவித்தது குறித்து இடிந்தகரையில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். இக் கூட்டத்தில் உதயகுமாருடன் சேர்ந்து தங்களிலும் பலர் கைதாவது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: