கெட்டவன்னு தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும்?: சேரன் கண்ணீர்

சென்னை: கெட்டவன் என்று தெரிந்தும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று இயக்குனர் சேரன் தன் மகளின் காதல் விவகாரம் பற்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் தனது மகளின் காதல் விவகாரம் குறித்து இன்று பகல் 12.30 மணிக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மனைவி செல்வராணி மற்றும் இயக்குனர் அமீர் ஆகியோர் இருந்தனர். சேரன் 

செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இதுவரை வெளி உலகிற்கு என் மனைவியை நான் அறிமுகப்படுத்தியது இல்லை. தற்போது அவரை அறிமுகப்படுத்துகிறேன். இவர் தான் என் மனைவி. எனக்கு 2 மகள்கள். நான் பணக்காரன் அல்ல. சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன். அப்பா ஒரு தியேட்டர் ஊழியர், அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணியும், பணக்கார வாசனையும் வராமல் இருக்க அவர்களை மிகவும் கவனமாக வளர்த்தேன் என்று சேரன் கூறினார்.

நான் என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் மகள்களுக்கு நாங்கள் எந்த ஜாதி என்று இதுவரை நான் கூறியதில்லை. மூத்த மகள் விவரம் தெரிந்தவள். இளையவள் தாமினிக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் அவளை செல்லமாக வளர்த்தோம் என்று தன் மகளை நினைத்து கண்கலங்கினார் சேரன்.

தாமினிக்கு 18 வயதில் காதல் வந்தபோது அதை நாங்கள் எதிர்க்கவில்லை. படிப்பை முடித்த பிறகு திருமணம் செய்து கொடுக்கிறோம் என்றோம். ஆனால் பையனை பற்றி விசாரித்தபோது அவனது பின்னணி எங்களுக்கு பயத்தை அளித்தது என்றார் சேரன்.

இருதய நோயுள்ள தாயுடன் இருந்தான். வேலை இல்லை. நான் சந்துருவின் குடும்பத்தாரை சந்தித்து பேசினேன். மாதம் ரூ. 10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதி, வாழ்க்கையில் முன்னேறிக் காட்டு, 3 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். அதுவரை ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றாதீர்கள் என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். அவனும் சரி என்றான். ஆனால் எனக்கு தெரியாமல் அவர்கள் தொடர்ந்து பேசி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் அவன் என் மகளை எனக்கு எதிராக திருப்பிவிட்டான். சந்துருவிடம் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை. பேசாமல் இருந்தால் செத்துவிடுவேன் என்று என் மகளை பேச வைத்தான். நான் உடனே அவனுக்கு போன் போட்டு கொடுத்து என் மகளை பேச வைத்தேன். எந்த தகப்பனும் செய்யாததை செய்தேன். அதன் பிறகு அவன் நிறைய பொய் கூறினான். என் மகளுடன் பேசக் கூடாது என் நான் கூறிய நாட்களில் இரவு நேரத்தில் அவன் பிற பெண்களுடன் வெகு நேரம் பேசி இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று சேரன் தெரிவித்தார்.

அவன் ஃபேஸ்புக்கில் என் மூத்த மகளிடம் ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறான். அவனுக்கு 7,8 பெண்களுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க நாங்கள் தயார். மோசமான நடத்தை, பொருளாதாரம் சரி இல்லை, பெண்களுடன் தகாத தொடர்பு என்று இதை எல்லாம் பார்த்த பிறகும் ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும் என்று சேரன் வருத்தப்பட்டார்.

உன் அப்பாவின் படத்தில் நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். இதையடுத்து எழில் இயக்கும் படத்தில் அவனை நடிக்க வைக்குமாறு என் மகள் என்னிடம் தெரிவித்தாள் என்றார் சேரன்.

என் மகளை வைத்து பணத்தையும், சொத்துக்களையும் பறிக்க திட்டமிட்டதை உணர்ந்தேன். அவனை நான் அடிக்கவும் இல்லை, கொலை மிரட்டலும் விடுக்கவில்லை. என் மகள் ஒரு கட்டத்தில் மனம் மாறி சந்துரு வேண்டாம் என்றாள். ஆனால் தற்போது அவள் மனதை மாற்றி மூளை சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறான் என்றார் சேரன் அழுதபடியே.

சந்துரு நல்லவன் இல்லை. அவன் குடும்பமும் நல்ல குடும்பம் இல்லை. அவன் மீது 3 பெண்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நல்ல குடும்பமாக இருந்தால் நானே சேர்த்து வைப்பேனே. அவனது குடும்பப் பின்னணி குறித்து உளவுத்துறை விசாரிக்க வேண்டும் என்றார் இயக்குனர் அமீர்.

தங்கள் மகள் கெட்டவனை நம்பி தங்களை எதிர்ப்பதை நினைத்து சேரனும், அவரது மனைவியும் அழுதபடியே பேட்டி அளித்தனர். ஆனால் தாமினியோ பெற்றோர் வேண்டாம், காதலன் தான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: