சென்னை: பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி பாலியல் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தலைவர் பன்முகம் கொண்டவர். சென்னையில் பிரபலமான கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். டிவி வைத்திருக்கிறார். பத்திரிக்கை வைத்திருக்கிறார்.
இவர் மீதுதான் இந்தப் பரபரப்பான புகார் எழுந்துள்ளது. அவர் மீது குற்றம் சாட்டியிருப்பவர் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் ஆவார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். மீனவர் சமுதாயத்தைச் சார்ந்தவர். தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2011 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கூட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக இவர் போட்டியிட்டாராம். அந்த கட்சி தலைவருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்ட அந்த பெண் கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் இளைஞரணி செயலாளர் ஆகியோர் மீது பாலியல் ரீதியான புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவியதால் பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பான புகாரை அவர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், உளவுத்துறைக்கும் அனுப்பி வைத்துள்ளாராம். ஆனால் எந்தக் காவல் நிலையத்திலும் இவர் புகார் கொடுக்கவில்லை. அது ஏன் என்று தெரியவில்லை.
இந்த தகவல் குறித்த உண்மை தன்மை அறிய மாநில உளவுத்துறை போலீசாரும் விசாரணையில் குதித்துள்ளார்களாம். புகார் குறித்த ஆதாரங்களை சேகரி்த்து ஆய்வு செய்து வருகின்றார்களாம்.
புகார் உண்மை என்றால் விரைவில் அந்த அரசியல் கட்சி தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை பாயுமாம். ஆனால் புகார் பொய் என்று தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பெண்மணி மீது வழக்கு தொடரப்படும் என காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகின்றது.