கோவை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தலைவா படம் தொடர்பாக பேச முயன்றுள்ளனர் நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி கிடைக்காததால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டதாம்.
தலைவா படம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. விஸ்வரூபத்திற்கு ஏற்பட்டது போன்ற சிக்கல் இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை சரணடைந்து சமரசமாகப் போக இருவரும் தற்போது முயற்சித்து வருகின்றனராம்.
முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் ஓய்வு மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்திக்க விஜய்யும், சந்திரசேகரும் அங்கு விரைந்தனராம்.
முதல்வரைச் சந்திக்க வேண்டும், தலைவா படம் குறித்துப் பேச வேண்டும் என்று நேரம் கேட்டு அணுகினராம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லையாம்.
ஆனால் முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். முதல்வரைப் பார்க்க முடியாததால் விஜய்யும், அவரது தந்தையும் தற்போது திரும்பி விட்டனராம்.
விஜய்யும், சந்திரசேகரும் முதல்வரைப் பார்ப்பதற்காக வந்தபோது கெரடாமட்டம் என்ற சோதனைச் சாவடியோடு அவர்களை காவலர்கள் நிறுத்தி விட்டனராம். பாதியிலேயே நிறுத்தி தங்களை முதல்வர் தரப்பு திருப்பி அனுப்பி விட்டதால் பெருத்த ஏமாற்றத்துடன் இருவரும் திரும்பியுள்ளனராம்.