கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்த் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
கடற்படை திட்ட இயக்குனரகம் வடிவமைத்த, விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரந்தின் கட்டுமானப் பணி 2006 நவம்பரில், கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் துவங்கியது. 260 மீட்டர் நீளம் மற்றும் 60 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலின் எடை 37, 500 டன்.
உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம் தாங்கிக் கப்பலின் முதல் கட்ட கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து கப்பலை ராணுவ அமைச்சர் அந்தோணி, அவரது மனைவி எலிசபெத், கப்பல் துறை அமைச்சர் வாசன் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். இதன் பின் கப்பல் மீண்டும் கட்டுமானத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தேவையான கருவிகள் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணி நடைபெறும்.
வரும் 2016ல் கப்பலின் விரிவான சோதனை ஓட்டம் நடைபெறும்; 2018ம் ஆண்டில் கடற்படையில் சேர்க்கப்படும். மிக் - 29, காமோவ் - 31 மற்றும் இலகு ரக விமானங்கள், இந்த கப்பலில் இருந்து பறக்கவும், தரையிறங்கவும் முடியும். கப்பலை துவக்கி வைக்கும் விழா, "இந்திய கடற்படையின், உள்நாட்டு தொழில்நுட்பத்திற்கு மகுடம் சூட்டும் விழாவாக அமையும்' என கடற்படை துணைத் தளபதி ஆர்.கே.தோவன் கூறியுள்ளார்.
ஐ.என்.எஸ். விக்ரந்த் துவக்கி வைக்கப்படுவதன் மூலம், இதே போன்ற போர்க்கப்பல்கள் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வரிசையில், இந்தியாவும் இடம்பெறும்.