புதுடில்லி : பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரிலேயே தனி தெலுங்கானா அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றுவது நடக்காத காரியம் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த 5 அல்லது 6 மாதங்களுக்குள் தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதனால் தனி தெலுங்கானா இப்போதைக்கு அமையாது என்பது உறுதியாகி உள்ளது.
ஷிண்டே உறுதி :
பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் குறித்தும், தனி தெலுங்கானா அமைப்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் ஷிண்டே தெய்தியாளர்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது : பார்லி., கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 30 வரையிலான 16 நாட்கள் நடைபெறும்; இந்த கூட்டத் தொடரில் தனி தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்படாது; இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யவும் நான் நினைக்கவில்லை; அனேகமாக அடுத்த பார்லி., கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படலாம்; பொதுவாக தனி தெலுங்கானா அமைய 8 முதல் 9 மாதங்கள் ஆகும்; ஆனால் 5 அல்லது 6 மாதங்களுக்குள் மசோதாவை தாக்கல் செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்; அதற்கு முன்பாக அமைக்கவும் முயற்சி செய்கிறோம்; ஒருவேளை மசோதா நிறைவேற்றப்பட்டு தனி தெலுங்கானா அமைந்தால் நல்லது; ஆனால் தனி தெலுங்கானா அமையாவிட்டால் வேறு பல பிரச்னைகள் உருவாக வாய்ப்புள்ளது; அதனால் இவற்றை கருத்தில் கொண்டு அரசியலமைப்பு சாசனங்களின் அடிப்படையில் ஆலோசனை நடத்தி முடிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஷிண்டே தெரிவித்துள்ளார்.
பா.ஜ., கோரிக்கை :
பார்லி., மழைக்கால கூட்டத் தொடரிலேயே தனி தெலுங்கானா குறித்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பா.ஜ., மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்த கொள்ள வந்த லோக்சபா எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜூம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். தனி தெலுங்கானா அமைப்பதற்கு காங்கிரஸ் அமைச்சர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பா.ஜ., தலைவர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். தனி தெலுங்கானாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது அப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரசிற்கு நெருக்கடி :
தனி தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா மற்றும் ராயலசீமா எம்.எல்.ஏ.,க்கள் பலரும், காங்கிரஸ் அமைச்சர்கள் 19 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநில முதல்வர் கிரண்கமார் ரெட்டியிடம் அளித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானா மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிடம் போட்டிருந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து வருவதால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்கவும், அமைச்சர்களின் ராஜினாமாவை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை சமாதானப்படுத்தவும் தற்காலிகமாக தனி தெலுங்கானா அமைப்பதை காங்கிரஸ் மேலிடம் ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கூர்காலாந்து, உ.பி.,யை 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் போராட்டம் செய்து வருவதாலும் காங்கிரஸ் தனது முடிவை தளர்த்திக் கொண்டதற்கு ஒரு காரணம் என கூறப்படுகிறது.