நீலகிரியில் கனமழையால் நிலச்சரிவு: முதுமலை புலிகள் காப்பகத்தை வெள்ளம் சூழ்ந்தது

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நீடித்து வரும் கனமழையால் அங்கு பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாயார் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீரினால் முதுமலை புலிகள் காப்பகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 1223 மி.மீ. மழை கொட்டித்தீர்த்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர், பந்தலூர், மஞ்சூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. 

இதில் நேற்று மட்டும் 21 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மரங்கள் ஆங்காங்கே விழுந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 

நிரம்பிய அணைகள் 

தொடர் மழையின் காரணமாக அணைகள் மற்றும் நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. ஊட்டி அருகே உள்ள கிளன்மார்கன் அணை நிரம்பி உள்ளது.இதையெடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

புலிகள் காப்பகத்தில் வெள்ளம் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயார் நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு பின்னர் நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், ஆற்றின் கரையோரம் வசித்து வரும் ஆதிவாசி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்கி உள்ளனர். 

இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக முதுமலையில் உள்ள காட்சி முனை கோபுரம், தண்ணீர் நீரேற்று நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் புகுந்து உள்ளது. இதையடுத்து, புலிகள் காப்பகத்தில் உள்ள வன விலங்குகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர தொடங்கி உள்ளன. கடந்த சிலதினங்களாகவே நீலகிரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

மூணாறில் நிலச்சரிவு 

மூணாறில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மூணாறு பகுதியில் உள்ள குண்டளை, மாட்டுப்பட்டி, பழைய மூணாறு, ஹெட் ஒர்க்ஸ் அணை ஆகிய அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேவிகுளம் பகுதியிலும், மூணாறு-உடுமலை சாலையில் நயமக்காடு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே சாலையில் இருந்து மண் மேடுகள் அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்தது. நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.கனமழையினால் கடந்த ஒருவாரகாலமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: