வாகன உற்பத்தியில் நாட்டின் முதன்மை நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹைட்ரஜனில் இயங்கும் முதல் பஸ்சை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன்(இஸ்ரோ) இணைந்து தயாரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மஹேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் சோதனை மையத்தில் இந்த புதிய பஸ் குறித்த செயல்விளக்கம் நேற்று நடைபெற்றது.
இஸ்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் மத்தியில் இந்த புதிய பஸ் வெற்றிகரமாக சோதித்து காண்பிக்கப்பட்டது. இது நம் நாட்டு போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன .

கடந்த 2006ம் ஆண்டு இந்த பஸ்சை உருவாக்குவதற்காக டாடா மோட்டார்ஸ் மற்றும் இஸ்ரோவும் ஒப்பந்தமிட்டு கைகோர்த்தன. அதுமுதல் துவங்கிய தீவிர ஆராய்ச்சியின் பயனாக இந்த பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பஸ்சுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்பை இஸ்ரோ வடிவமைத்து வழங்கியுள்ளது. பஸ் தயாரிப்பு பணியை டாடா மோட்டார்ஸ் ஏற்றது.

ராக்கெட்டுகளுக்கான கிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பில் இஸ்ரோ நிபுணத்துவம் பெற்றுள்ளது. இந்த கிரையோஜெனிக் எஞ்சினில் திரவ நிலை ஹைட்ரஜன் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ரஜன் எரிபொருளை தயாரித்து, மிகுந்த பாதுகாப்போடு கையாளும் முறையில் கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரோ நிபுணத்துவம் பெற்றுள்ளது. ஆனால், கிரையோஜெனிக் எஞ்சினில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் தொழில்நுட்பதிற்கும், இந்த பஸ்சுக்கான ஹைட்ரஜன் எரிபொருள் அமைப்புக்கும் முற்றிலும் வேறுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ்சின் கூரையில் அதிக அழுத்தத்தில் ஹைட்ரஜன் அடங்கிய 8 எரிபொருள் பாட்டில்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஹைட்ரஜனிலிருந்து மின் உற்பத்தி செய்து, அதிலிருந்து எலக்ட்ரிக் மோட்டார்களை வைத்து பஸ் இயங்கும். டீசல் நிரப்புவது போன்றே பஸ்சுக்கு தினசரி இரவு இந்த ஹைட்ரஜன் எரிபொருள் பாட்டில்களை மாற்றிக்கொள்ள முடியும்.
டாடாவின் ஸ்டார் மார்கோபோலோ பஸ்தான் ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. ஹைட்ரஜனில் இயங்கும் பஸ்சில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார்கள் 250 எச்பி சக்தியையும், 1050 என்எம் டார்க்கையும் அளிக்கும். மணிக்கு 70 கிமீ வேகத்தில் செல்லும்.
அதிக அளவில் இந்த பஸ்களை இயக்கும்போது எரிபொருளுக்கான செலவீனம் ஒரு கிலோமீட்டருக்கு 50 சதவீதம் வரை குறையும் என சொல்லப்படுகிறது. மேலும், பெட்ரோல், டீசலுக்காக வெளிநாடுகளிடம் கையேந்துவதையும் எதிர்காலத்தில் தவிர்க்க முடியும்.

ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங், நியூமாட்டிக் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் என உலகத் தரம் வாய்ந்த அம்சங்களை கொண்டிருக்கும்.
நகர்ப்புறங்களில் பெருகி வரும் வாகனங்களால் ஏற்படும் கார்பன் மாசு கட்டுப்படுத்த இதுபோன்ற பஸ்களை இயக்குவது அவசியமாகியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளாகவும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் முக்கியத்துவம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்துக்கு தலைமை வகித்த இஸ்ரோவின் கவுரவ ஆலோசகர் ஞானகாந்தி கூறுகையில்," எதிர்கால போக்குவரத்து துறைக்கான புதிய அத்தியாயத்தில் அடி எடுத்து வைத்துள்ளோம். இஸ்ரோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பினரின் அயராத உழைப்புக்கும், கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது," என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி ஞானகாந்தி பத்ம விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் பயன்பாட்டுக்கு...

பல புதிய மாற்றுவழி வாகன எரிபொருள் தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனங்களை கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா பார்வைக்கு வைத்திருந்தது. அதில், இந்த ஹைட்ரஜன் பஸ்சின் கான்செப்ட்டும் இடம்பெற்றிருந்தது. விரைவில் இந்த ஹைட்ரஜன் பஸ் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.