மும்பை: மும்பையில் வீட்டில் தனியாக இருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை கத்தி முனையில் கற்பழித்துவிட்டு அங்கிருந்த பணம், பொருட்களை திருடிச் சென்ற முகமது இஸ்மாயில் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.
மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இசை பயின்று வருகிறார் 27 வயதான் ஸ்பெயின் நாட்டு பெண். அவர் கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்தபோது ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த மனிதன் அவரை கத்தி முனையில் 2 முறை கற்பழித்துவிட்டு வீட்டில் இருந்த ரூ.35,000 மதிப்புள்ள பொருட்களுடன் தப்பியோடிவிட்டான்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுமார் 50 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இறுதியாக முகமது பாதுஷா முகமது இஸ்மாயில் அன்சாரி(30) என்பவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் தான் குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் அந்த பெண் அன்சாரி தான் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ளார். இதையடுத்து அன்சாரி கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் திருடிய பணம் மற்றும் பொருட்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் தான் செய்த குற்றத்தையும் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அன்சாரி மீது ஏற்கனவே 20 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.