கொல்கத்தா: பாலியல் பலாத்கார புகாரில் சிக்கி கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ள பிங்கி பிராம்னிக் ஆண் என்பது மருத்துவ பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மீது மேற்கு வங்க போலீஸார் கற்பழிப்பு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர் பிங்கி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த ஜூன் மாதம் அனாமிகா ஆச்சார்யா என்ற பெண் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பிங்கி ஒரு ஆண். அவரும் நானும் பல வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு தற்போது மோசடி செய்து விட்டார் பிங்கி. என்னையும் அடித்துச் சித்திரவதை செய்தார். பலமுறை என்னை வற்புறுத்தி அவர் உறவு கொண்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிறைக்கும் அவர் அனுப்பப்பட்டார். அவர் ஆணா, பெண்ணா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
சோதனைகளின் முதல் கட்டத்தில் அவர் ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து பிங்கி வேதனையும், ஏமாற்றமும் வெளியிட்டார். இதையடுத்து மேலும் ஒரு சோதனைக்கு காவல்துறை உத்தரவிட்டது.
அதன்படி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை டாக்டர்கள் குழு பிங்கியிடம் சோதனை நடத்தினர். அதில், பாலின ரீதியாக பிங்கி ஒரு ஆண்தான் என்பதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
இதையடுத்து பிங்கி மீது கற்பழிப்பு மற்றும் மோசடிப் புகாரை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
தடகள வீராங்கனையாக அறியப்பட்ட பிங்கி தற்போது ஒரு ஆண் என்று மருத்துவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்பபையும் இது ஏற்படுத்தியுள்ளது.
பிங்கி பிராம்னிக் 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவு தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் ஆண் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அவரது பதக்கம் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.