பெங்களூர்: நித்தியானந்தாவின் சிஷ்யை என்று கூறப்படும் மலேசியாவைச் சேர்ந்த நித்திய கீதானந்தா என்பவருக்கும், நித்தியானந்தாவின் உடன் பிறந்த அண்ணன் செந்தில்குமாருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.
நித்தியானந்தாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தம்பி உண்டு. அண்ணன் பெயர் செந்தில்குமார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 40 வயதாகிறது. நித்தியானந்தாவின் தந்தை இறந்ததும், தனது தாயார் மற்றும் தம்பியை தன்னுடனேயே அழைத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அண்ணன் செந்தில்குமார் மட்டும் திருவண்ணாமலையில் தொடர்ந்து தங்கியுள்ளார். இந்த நிலையில் அவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. நித்தியானந்தாவின் சிஷ்யையானா மலேசியாவைச் சேர்ந்த சுபத்ரா என்கிற நித்திய கீதானந்தாவை மணக்கிறாராம் செந்தில்குமார். இவர்களது திருமணம் செப்டம்பர் 16ம் தேதி பிடதி ஆசிரமத்தில் நடைபெறவுள்ளதாம்.
திருமணத்திற்கா அழைப்பிதழில், நித்தியானந்தர் ஆண்டு 36ஆம் வருடம் ஆவணி மாதம் 31ந்தேதி திருமணம் என்று போடப்பட்டுள்ளது. மேலும், அவதார புருஷர் ஜகத்குரு பகவான் ஸ்ரீ ல ஸ்ரீ பரமஹம்ச நித்யானந்த ஞானசம்மந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் திருவருளால் நடைபெறவுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.