கோவையில் மூளைச் சாவு அடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம்!

கோவை: கோவையில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சாப்ட்வேர் எஞ்ஜினியரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது. 

கோவையை அடுத்த சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் மருதாசலம். பெயிண்டர். இவரது மனைவி கலாவதி. இவர்களது ஒரே மகன் ராஜகோபால் (வயது 23). 

கோவைப்புதூரில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு நண்பர் மனோஜ் என்பவருடன் ஈச்சனாரி விநாயகர் கோவிலுக்கு சென்றார். 

சாமி தரிசனம் முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் சரவணம்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது மோதியது. 

இந்த விபத்தில் ராஜ கோபாலும், மனோஜூம் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் ராஜகோபாலை காப்பாற்ற முடியவில்லை. 

நேற்று காலை 10 மணி அளவில் ராஜகோபாலுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யும்படி டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர். பெற்றோர்கள் கனத்த இதயத்துடன் தங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். 

அதன்பேரில் ராஜ கோபாலின் உடலில் இருந்து 2 சீறுநீரகங்கள், கல்லீரல், 4 இருதய வால்வுகள், 2 கண்கள் ஆகியவற்றை தானமாக பெற முடிவு செய்யப்பட்டது. 

கல்லீரல் மற்றும் 4 இருதய வால்வுகளை பெறுவதற்காக சென்னை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் விவேகானந்தன், மனோஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை 6 மணி அளவில் விமானம் மூலம் கோவை சென்றனர். அவர்கள் வந்தவுடன் இரவு 8.45 மணி அளவில் ஆபரேஷன் தொடங்கியது. 

வாலிபரின் 2 சிறுநீரகங்களில் ஒன்று சுந்தராபுரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சசிகலா என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் கோவை ராம்நகரில் எஸ்.பி.டி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நூர்ஜ ஹான் என்ற பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. 

2 கண்கள் கோவையில் உள்ள அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. 

கோவை விமான நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு பின்னர் விமானங்கள் புறப்படுவதில்லை. ஆனால் மருத்துவ சேவைக்காக கோவை விமான நிலையம் நேற்று நள்ளிரவு வரை செயல்பட்டது. 

4 இருதய வால்வுகள் மற்றும் கல்லீரலை குளோபல் ஆஸ்பத்திரி டாக்டர்கள் தனி விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். அதிகாலை 3.50 மணிக்கு சென்னையில் தனி விமானம் தரை இறங்கியது. முன்னதாக அங்கு ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது. விமானம் வந்து நின்றதும் அதன் அருகில் ஆம்புலன்ஸ் கொண்டு செல்லப்பட்டு அதில் உடல் உறுப்புகள் பாதுகாப்பாக ஏற்றப்பட்டது. 

விமான நிலையத்தில் இருந்து மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவ மனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்து இயக்கப்பட்டது. 

போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஆம்புலன்சிற்கு வேகமாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். 

குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையை சென்றடைந்த டாக்டர்கள் அங்கு ஏற்கனவே ஆபரேஷன் செய்ய தயாராக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த உப கரணங்களுடன் சிகிச்சையை தொடங்கினர். 

சிறுமி ஆதித்தயாவுக்கு வாலிபரின் கல்லீரலை பொருத்தி வெற்றிகரமாக ஆபரேஷனை செய்து முடித்தனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் கோவையில் இருந்து சென்னைக்கு உடல் உறுப்புகள் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

சிறிது நேரம் தாமதம் ஆனாலும் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

ராஜகோபாலின் இருதய 4 வால்வுகளும் குளோபல் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதை ஒரு சிறுமிக்கு பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 

விபத்தில் பலியான இளைஞரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: