இந்திய விமானப் படையில் உலகின் மாபெரும் சரக்கு விமானம் 'சி-17 குளோப்மாஸ்டர்'!

டெல்லி: உலகின் மிகப் பெரிய ராணுவ சரக்கு விமானமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் போயிங் நிறுவனத் தயாரிப்பான இந்த விமானம் 70 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது.


ஒவ்வொன்றும் தலா ரூ. 2,000 கோடி மதிப்புள்ளவை இந்த விமானங்கள். இந்த வகையைச் சேர்ந்த 10 விமானங்களை வாங்க கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. ரூ. 20,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் இரு நாடுகள் இடையிலான மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஒன்றாகும்.


டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ லாரிகள், நூற்றுக்கணக்கான படையினர் என பல்வேறு அதிக எடை வாய்ந்த சரக்குகளை இந்த விமானத்தால் கையாள முடியும்.


இப்போது இந்தப் பயன்பாடுகளுக்கு ரஷ்யத் தயாரிப்பான ஐ.எல்.76 ரக சரக்கு விமானங்களையே இந்திய விமானப் படை பயன்படுத்தி வருகிறது. இந்த விமானங்களை விட 30 டன் அளவுக்கு அதிக எடையை குளோப்மாஸ்டர் விமானங்களால் கொண்டு செல்ல முடியும்.


உலகிலேயே இந்தியாவுக்குத் தான் இந்த வகையைச் சேர்ந்த 10 விமானங்களைத் தர அமெரிக்கா முன் வந்துள்ளது. வேறு எந்த நாட்டுக்கும் இதுவரை 2,3 விமானங்களுக்கு மேல் அமெரிக்கா தந்ததில்லை. இதனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 10 குளோப்மாஸ்டர் விமானங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இந்த 10 விமானங்களும் வந்து சேர்ந்த பின் மேலும் 6 விமானங்களை வாங்கவும் ஒப்பந்தத்தில் இடம் உள்ளது.


இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள 256 குளோப்மாஸ்டர் விமானங்களில் 222 விமானங்கள் அமெரிக்க விமானப் படையிடம் தான் உள்ளன. மிச்ச விமானங்கள் ஆஸ்திரேலியா, கனடா, கத்தார், யுஏஇ, இங்கிலாந்து மற்றும் நேடோ படையினருக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.


இந்த விமானங்களை இந்திய விமானப்படையில் இணைக்கும் நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நேற்று நடந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி இந்த விழாவில் கலந்து கொண்டார். புதிய விமானங்களை விமானப்படையில் இணைப்பதன் அடையாளமாக விமானத்தின் சாவியை படைப்பிரிவின் கமாண்டரிடம் ஆண்டனி வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய விமானப்படை தளபதி ஏ.கே.பிரவுனி, சி-17 ரக விமானங்கள் வடகிழக்கு மாநிலங்கள், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் உயரமான விமானப்படை தளங்களில் இருந்து இயக்கப்படும் என்றார்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: