மும்பை: மும்பையில் ஆட்டோவில் தனியாக சென்ற இளம்பெண்ணிடம் பைக்கில் வந்த இருவர் மோசமாக நடந்து கொண்டுள்ளனர்.
மும்பை மலாத் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர்(ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்) ஓஷிவாராவில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு கடந்த சனிக்கிழமை மாலை 5.30 ஆட்டோவில் தனியாக சென்றுள்ளார்.
அந்த ஆட்டோ லிங்க் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக ஒரு பைக்கில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஆட்டோவுக்கு அருகிலேயே சென்றதுடன் அந்த பெண்ணை கிண்டல் செய்து, அசிங்கமாக பேசியுள்ளனர். அவரைப் பார்த்து விசில் அடித்ததோடு, கண்ணடித்துள்ளனர். அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறிய ஆட்டோ டிரைவரை அவர்கள் திட்டி, சண்டைக்கு அழைத்துள்ளனர்.
அந்த இருவரும் ஆட்டோவின் கம்பியைப் பிடித்து கொண்டே பைக்கில் சென்றுள்ளனர்.
இதில் பயந்துபோன அப்பெண் நைசாக தனது செல்போனில் அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டார். அவர்களின் ஆட்டம் அத்துமீறவே ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்த முயன்றதும் அவர்கள் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தால் ஏதாவது பின்விளைவுகள் வருமோ என்று அவர் பயந்து கொண்டு புகார் கொடுக்கவில்லை. அவர்களின் புகைப்படத்தை பாலிவுட்டில் துணை இயக்குனராக இருக்கும் அப்பெண்ணின் நண்பர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இந்த புகைப்படத்தை பார்த்த 2 பெண்கள் அந்த இருவரும் தங்களிடமும் மோசமாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் தான் ஓஷிவாரா பகுதியில் டிவி நடிகை லவ்லீன் கௌர் திருடன் உள்பட 3 பேரால் தாக்கப்பட்டார்.
அதை மக்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர உதவிக்கு வரவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் தற்போது ஒரு பெண்ணிடம் 2 பேர் கலாட்டா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.